[X] Close

நான் கேட்க தவிர்க்கும் இளையராஜாவின் அந்தப் பாட்டு! - உருகும் எழுத்தாளர் சுகா


ilayaraaja-suka

இசைஞானி இளையராஜா

  • வி.ராம்ஜி
  • Posted: 27 Jan, 2019 12:32 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

நான் கேட்கத் தவிர்க்கும் இளையராஜாவின் ஒரேயொரு பாட்டு அதுதான் என்று எழுத்தாளர் சுகா நெக்குருகிச் சொன்னார்.

எழுத்தாளர் சுகா தனியார் இணையதள சேனலுக்குப் பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

இசைக்கு வண்ணங்களெல்லாம் இல்லை. ஆனால், இசையில் வண்ணங்களை நிரப்பிக் கொடுத்திருப்பார் இளையராஜா. அந்தப் பாடலை அழகாக இயக்கியிருப்பார் நடிகரும் இயக்குநருமான நாசர். அந்தப் படம் அவதாரம். அந்தப் பாடல்... தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ? பாட்டு. பார்வையற்ற பெண்ணுக்கு பாடலாலும் இசையாலும் வண்ணங்களைச் சொல்லியிருப்பார் ராஜா சார்.

அதேபோல், கேளடி கண்மணி படத்தில் வரும் ‘கற்பூர பொம்மை ஒன்று’ பாடல் என்னை என்னவோ செய்யும். ஒரு பேரானந்தத்தைத் தரும்.

காது இருப்பவர்கள் எல்லோருமே இளையராஜா ரசிகர்கள்தான். இப்படியாக எத்தனையோ பாடல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

அதில் ஒரு பாடல். அந்தப் பாடல் ரொம்பவே பிடிக்கும். ஆனால் கேட்பதற்கு தவிர்த்துக்கொண்டே இருப்பேன். ஆனாலும் எனக்குப் பிடித்த பாடல் அது.

என்னுடைய அம்மா, புற்றுநோயால் ரொம்பவே அவதிப்பட்டார். அவரின் கஷ்டத்தைக் காணமுடியவில்லை. ‘கடவுளே... நல்லபடியா, சிரமம் இல்லாமப் போய் சேரணும்’ என்று பிரார்த்தனை செய்தேன். ஒருநாள்... அம்மா இறந்துபோனாள்.

நெல்லை குறுக்குத்துறை. தாமிரபரணி. கருப்பந்துறை சுடுகாடு. அம்மாவை ஊர்வலமாக எடுத்துச் சென்று, எரியூட்டாகிவிட்டது. பிறகு, முடி மழிக்க அமர்ந்திருக்கிறேன். தலையில் சில்லென்று தண்ணீர் தெளிக்கப்படுகிறது. அப்போது, எங்கிருந்தோ வருகிறது அந்தப் பாட்டு. ‘அழகிய கண்ணே...’ பாட்டு. உதிரிப்பூக்கள் படத்தில் வந்த அந்தப் பாட்டு. நான் வெடித்து அழுகிறேன். அருகில் உள்ள என் தம்பியும் அழுகிறான்.

என் தாய்மாமா உட்பட எல்லோரும், எங்களைத் தேற்றுகிறார்கள். ஆறுதல் சொல்லுகிறார்கள். ‘போனவ திரும்பியா வரப்போறா.’ என்று சொல்லுகிறார்கள். அம்மாவின் பிரிவை, அந்தப் பாட்டு மொத்தமாகச் சொல்லி உணர்த்தியது போல் இருந்தது.

பிறகு, அந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் அழுகை வந்துவிடும் எனக்கு. அதனாலேயே அழகிய கண்ணே பாடலைக் கேட்பதை, தவிர்க்கப் பார்ப்பேன். பிடிக்கும். ரொம்பப் பிடிக்கும். ஆனாலும் பாட்டைக் கேட்க தவிர்த்துக்கொண்டே இருக்கிறேன்.

இவ்வாறு எழுத்தாளர் சுகா தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close