[X] Close

சேரனின் பரம விசிறி நான்; இயக்குநர் மகேந்திரன் நெகிழ்ச்சி


cheran-magendhiran

இயக்குநர் மகேந்திரன்

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Jan, 2019 10:55 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

சேரன் எனும் உன்னதமான படைப்பாளியின் பரம விசிறி நான் என்று இயக்குநர் மகேந்திரன் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

சேரன் இயக்கியுள்ள திருமணம் - சில திருத்தங்களுடன் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில், மூத்த இயக்குநர்களையும் கடந்த ஆண்டு நல்ல படங்களைத் தந்த புதிய இயக்குநர்களையும் மேடையில் அமர வைத்து அழகு பார்த்தார் சேரன்.

விழாவில் இயக்குநர் மகேந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:

திருத்தங்கள் அவசியம் தேவை. எல்லா விஷயங்களுக்கும் எல்லா மனிதர்களுக்கும் திருத்தங்கள் என்பது மிக மிக அவசியம். சிலசமயங்களில் திருத்தங்கள் செய்யவேண்டும். சில விஷயங்களையோ சில நபர்களையோ திருத்தங்கள் செய்தாலும் வீண் எனும் நிலையும் இருக்கும். அப்போது நாம் நம் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும்.

திருமணம் என்று மட்டுமே டைட்டில் வைத்திருந்தால், அது யாரோ ஒருவரின் படமாக இருந்திருக்கும். திருமணம் - சில திருத்தங்களுடன் என்று வைத்தார் அல்லவா. அதுதான் சேரன் டச். அதுதான் சேரன் படம்.

இந்த விழாவில், வேறு யாரையும் பற்றி பேசவே இல்லையே என்று யாரும் தவறாக நினைக்கவேண்டாம். என் மனம் முழுக்க முழுக்க சேரனே இருக்கிறார். அதனால் அவரைப் பற்றி மட்டுமே பேச நினைத்திருக்கிறேன்.

சேரன், மிகப்பெரிய படைப்பாளி. மனிதநேயம் மிக்கவர். திரையுலகில் நல்ல நல்ல திருத்தங்களைக் கொண்டு வந்தவர். திரையுலகில், மனித நேயத்துடன் சேரன் இருப்பதுதான் பெரிய விஷயம். இது ரொம்பவே விசேஷம்.

வாழ்க்கை முன்னேயும்பின்னேயுமானது. அது சேரனுக்கும் வந்திருக்கிறது. இதை பெரிய இடைவெளி என்று சொன்னார்கள். சின்ன இடைவெளிதான். இதில் இருந்து இப்போது மீண்டு வந்துவிடுவார் சேரன்.

நான் வீட்டில் இருக்கும்போது கூட, யாரிடமாவது சேரனைப் பற்றி விசாரித்துக்கொண்டே இருப்பேன். சொல்லப்போனால், சேரனை நினைக்காத நாளே இல்லை. அவர் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் பாசமும் கொண்டிருக்கிறேன். சேரனின் பரம விசிறி நான்.

இந்தப் படத்தைத் தயாரித்த பிரேம்நாத் சிதம்பரத்துக்கு நன்றிகள். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, ‘அடுத்த படம் மார்ச்சில் தொடங்குகிறேன். அந்தப் படத்தையும் சேரன் சார்தான் இயக்குகிறார்’ என்று தெரிவித்தார். சேரனின் இந்தப் படமாகட்டும், அடுத்த படமாகட்டும். இரண்டுமே மிகப்பெரிய வெற்றி அடையவேண்டும் என விரும்புகிறேன். ஏனென்றால், சேரன் எனும் உன்னதமான படைப்பாளியின் பரம விசிறி நான்!

இவ்வாறு இயக்குநர் மகேந்திரன் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close