[X] Close

சிவாஜி... ஜனவரி 26... ரிலீஸ்!


sivaji-jan-26

திரிசூலம்

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Jan, 2019 10:11 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

52ம் ஆண்டு பராசக்தியின் மூலமாக திரையுலகிற்கு வந்த சிவாஜி, வரிசையாக படங்களில் நடித்தார். இந்தப் படம் தீபாவளியன்று வெளியானது. அதேபோல், பொங்கல் முதலான பண்டிகைகளில் நிச்சயமாக சிவாஜியின் படம் ரிலீசாகியிருக்கும்.

குறிப்பாக, குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி அன்று, முதன்முதலாக நானே ராஜா என்றொரு படம் வந்தது. ஆனால் இந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. 25.1.1956 அன்று ரிலீசான இந்தப் படத்தில், எதிர்மறையான கதாபாத்திரத்தில், பிரமாதப்படுத்தியிருப்பார் சிவாஜி.

அடுத்து, ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் சிவாஜி நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படம் வெளியானது. 1966ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வெளியான இந்தப் படம், சிவாஜியின் நடிப்பில் தனியிடம் பிடித்தது.

56ம் ஆண்டு குடியரசு தினத்துக்குப் பிறகு 66ம் ஆண்டு குடியரசு நாளில் வெளியானதை அடுத்து, 72ம் ஆண்டு குடியரசுதினத்தில், ராஜா படம் வெளியானது. கே.பாலாஜி தயாரிப்பில், ஜெயலலிதா, கே.பாலாஜி, சந்திரபாபு என பலரும் நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் இந்தி ரீமேக்.

அதேபோல், 74ம் ஆண்டு, இந்திப் படத்தின் ரீமேக்காக சிவகாமியின் செல்வன் திரைப்படம் வெளியானது. வாணிஸ்ரீ, லதா, ஏவிஎம்.ராஜன், ஸ்ரீகாந்த் என பலரும் நடித்திருந்தனர். சுமாரான வெற்றியைத் தந்தது இந்தப் படம்.

76ம் ஆண்டு குடியரசு தினத்தின் போது, ஜெமினிகணேசனுடன் இணைந்து  நடித்த உனக்காக நான் திரைப்படம் வெளியானது. லட்சுமி, வெண்ணிற ஆடை நிர்மலா முதலானோர் நடித்திருந்தனர். இந்தப் படமும் சுமாரான வெற்றியைத்தான் தந்தது.

அடுத்து, 77ம் ஆண்டு வெளியான தீபம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிவாஜியுடன் இணைந்து சுஜாதா, நாகேஷ், விஜயகுமார், மேஜர் சுந்தர்ராஜன் முதலானோர் நடித்திருந்தனர். பூவிழி வாசலில் யாரடி வந்தது, அந்தப்புரத்தில் ஒரு மகராணி என பல பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. இளையராஜா இசையமைத்திருந்தார். கே.விஜயன் இயக்கியிருந்தார்.

78ம் ஆண்டு, குடியரசு தின நன்னாளில், முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், சுஜாதாவுடன் இணைந்து நடித்த அந்தமான் காதலி எனும் திரைப்படம் ரிலீசானது. எம்.எஸ்.வி. இசையில் எல்லாப் பாடல்களும் வெற்றி அடைந்தன. நினைவாலே சிலை செய்து, அந்தமானைப் பாருங்கள், பணம் என்னடா பணம் பணம் முதலான பாடல்கள் நினைவுக்கு வந்திருக்குமே! அட்டகாசமான வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.

79ம் ஆண்டு குடியரசு தினத்தன்று ரிலீசான சிவாஜியின் படத்தை ரசிகர்களும் தமிழக மக்களும் மறக்கவே மாட்டார்கள். சிவாஜியின் 200வது படம் இது. மூன்று வேடங்களில் நடித்த படமும் கூட. பலே பாண்டியா, தெய்வமகன் போல் இதிலும் மூன்று வேடம். திரிசூலம் படத்தை மறந்துவிடமுடியுமா என்ன? குடும்பம் ப்ளஸ் காதல் ப்ளஸ் குறும்பு ப்ளஸ் ஆக்‌ஷன் என கலந்துகட்டி அதகளம் பண்ணியிருந்த திரிசூலம், பல இடங்களிலும் 200 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

80ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி ரிலீசான ரிஷிமூலம் சுமாரான வெற்றியைப் பெற்றது. 82ம் அண்டு ஜனவரி 26ம் தேதி வெளியான ஹிட்லர் உமாநாத் திரைப்படம் படுதோல்வியைச் சந்தித்தது.

83ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெளியான நீதிபதி திரைப்படமும் 85ம் ஆண்டு அதேநாளில் வெளியான பந்தம் திரைப்படமும் நல்ல வெற்றியை அடைந்தன. 86ம் ஆண்டு மருமகள் திரைப்படமும் 87ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடும்பம் ஒரு கோவில் திரைப்படமும் வெளியாகின. ஆனால் சிவாஜிக்கு எந்தப் பெருமையும் சேரவில்லை.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close