[X] Close

ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்காது! - இயக்குநர் சேரன்


cheran-rajini

ரஜினி - சேரன்

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Jan, 2019 12:41 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

ரஜினியின் ஸ்டைல் எனக்குப் பிடிக்காது என்று இயக்குநர் சேரன் விழா ஒன்றில் பேசினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர் சேரன் திருமணம் - சில திருத்தங்களுடன் எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் விழாவில், மூத்த இயக்குநர்களையும் கடந்த ஆண்டு வெற்றிப்படங்கள் கொடுத்து நம்பிக்கைக்கு உரிய இயக்குநர்கள் எனப் பெயரெடுத்த புதிய இயக்குநர்களையும் மேடையில் அமர்த்தி வாழ்த்தி, மரியாதை செய்தார் சேரன்.

அப்போது இயக்குநர் சேரன் பேசியதாவது:

மூத்தவர்களை எப்போதுமே மதிக்கவேண்டும். அந்தப் பண்பு இப்போது குறைந்துகொண்டே வருகிறது. நம் வீட்டில் உள்ள பெரியவர்களைக் கூட இப்போது நாம் மதிக்கத் தவறி வருகிறோம். நம்முடைய அப்பாவை நாம் மதிக்கவேண்டும். அதேபோல் நம் பிள்ளைகளின் சிந்தனைகளை வரவேற்கவேண்டும்.

ஸ்ரீதர் இல்லாமல், பீம்சீங் இல்லாமல், பந்துலு இல்லாமல், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இல்லாமல், பாலசந்தர் இல்லாமல், பாரதிராஜா இல்லாமல், பாக்யராஜ் இல்லாமல், மகேந்திரன் இல்லாமல், கே.எஸ்.ரவிகுமார் இல்லாமல் இன்றைய சினிமா இந்த வளர்ந்திருக்கவே வளர்ந்திருக்காது.

இயக்குநர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படமும் சரி, முள்ளும் மலரும் திரைப்படமும் சரி... மிகப்பெரிய தாக்கத்தை நமக்குள் ஏற்படுத்தின. சோகமே உருவெனக் கொண்ட அஸ்வினி கவலையும் துக்கமுமாக நடந்து வரும்போது, அப்படியே மேகத்தின் நகர்வைக் காட்டியிருப்பார் மகேந்திரன் சார். அந்த மேகத்தின் நகர்வு, அஸ்வினியின் மனசுக்கு இதமாக இருக்கும். கொஞ்சம் ஆறுதலைத் தரும். கவிதை மாதிரி இந்தக் காட்சியை வைத்திருப்பார்.

அதேபோல், முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் நடிப்பு அவ்வளவு யதார்த்தமாகவும் அழகாகவும் இருக்கும். எல்லோரும் ரஜினியின் ஸ்டைல் பிடிக்கும் என்பார்கள். எனக்கு ரஜினியின் ஸ்டைல் பிடிக்காது. நடிப்புதான் பிடிக்கும். மகேந்திரன் சார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும்போதெல்லாம் அவரின் பண்பட்ட நடிப்பு வெளிப்பட்டது.

அதேபோல், விஞ்ச் வைத்துக்கொண்டு, அழகாக கதை பண்ணியிருப்பார் மகேந்திரன் சார். இன்றைக்கு வரைக்கும் விஞ்ச்-ஐ களமாக வைத்துக்கொண்டு, எவருமே படம் பண்ணவில்லை.

இவ்வாறு சேரன் பேசினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close