பணிப்பெண்ணுக்கு கொடுமை: நடிகை பானுப்ரியா மீது போலீஸார் வழக்கு

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்ரியா மீது ஆந்திர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக பத்மாவதி என்பவர் கிழக்கு கோதாவரி மாவட்டம், சாமர்லகோட்டா போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிழக்கு கோதாவரி மாவட்டம், தண்ட்ரவாடா கிராமத்தை சேர்ந்த நாங்கள் ஏழ்மையின் காரணமாக எனது மகள் சந்தியாவை (14), சென்னையில் வசிக்கும் நடிகை பானுப்ரியா வீட்டில் வீட்டுவேலை செய்ய அனுப்பினோம். மாதம் ரூ. 10 ஆயிரம் ஊதியமாக தருவதாக கூறினார். ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக மாத ஊதியம் வழங்காமல் அதிக வேலை வாங்குகிறார். மேலும், இவரது தம்பி, எனது மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துகிறார். தற்போது என் மகள் மீது திருட்டு பட்டம் கட்டி உள்ளார். இவ்வாறு பத்மாவதி கூறினார். இந்த புகார் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நடிகை பானுப்ரியா கூறும்போது, “சந்தியாவுக்கு மாதம்தோறும் ஊதியம் வழங்குகிறேன். ஆனால், அப்பெண் பணம், நகை, செல்போன், கேமரா போன்றவற்றை திருடி இருக்கிறாள். நான் கேட்டதற்கு, செல்போன், கேமரா போன்றவற்றை கொடுத்து விட்டாள். ஆனால், திருடிய ரூ.1.5 லட்சத்தை கேட்டதற்கு, அவரது தாயார் பத்மாவதி போலீஸில் பொய் புகார் அளித்துள்ளார். இதனை நான் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்”.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.