[X] Close

’நானும் நாகேஷூம் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்; ஜெயிச்சோம்!’ – வாலி நினைவுகள்


nagesh-vaali

வாலி - கமல் - நாகேஷ்

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Jan, 2019 19:40 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

நாகேஷும் நானும் ஒரே ரூம்ல இருந்தோம். அவன் எனக்குத் தெரியாம பணத்தை ஒளிச்சு ஒளிச்சு வைப்பான். நான் அதைக் கண்டுபிடிச்சு திருடிருவேன். ரெண்டுபேருமே இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்; ஜெயிச்சோம் என்று கவிஞர் வாலி தன் நினைவுகளை எஸ்.ஜே.சூர்யாவிடம் பகிர்ந்து கொண்டார்.

தனியார் சேனல் ஒன்றில், கவிஞர் வாலியை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா கலந்துகொண்டு, வாலியிடம் கேள்விகள் கேட்டார்.

அப்போது எஸ்.ஜே.சூர்யா, ‘நீங்களும் நாகேஷ் சாரும் ஒண்ணா ஒரே ரூம்ல தங்கியிருந்தீங்களே… அந்த அனுபவங்களைச் சொல்லுங்க சார்’ என்று கேட்டார்.

‘ஆமாம். நானும் நாகேஷூம் ஒரே ரூம்ல இருந்தோம். அவன் (நாகேஷ்) டிராமால நடிச்சிட்டிருந்தான். சினிமா வாய்ப்புக்காக தவிச்சிட்டிருந்தான். நான் பாட்டு எழுதறதுக்கு வாய்ப்பு கேட்டு அல்லாடிட்டிருந்தேன்.

சாப்பிடக் காசு இல்லாம பல நாள் பசியோடயே இருந்திருக்கோம். இத்தனைக்கும் அவன் ரயில்வேல வேலை பாத்தான். அவன் பாக்கெட், பொட்டில வைச்சிருக்கிற காசெல்லாம் எடுத்து நான் செலவு பண்ணிருவேன். இங்கெல்லாம் வைச்சா, நான் எடுத்துடுறேன்னு புதுப்புது இடமா பாத்து வைப்பான். அப்பவும் நான் கண்டுபிடிச்சு எடுத்துருவேன்.

அதேபோல ‘ரங்கராஜா… உன் கைல இருக்கற கடிகாரம் ரொம்பப் பழசாயிருச்சே’ம்பான். ‘ஆமாம்டா’ம்பேன். ‘கழட்டிக் கொடு, மத்தியானம் சாப்பிடுவோம்’னு சொல்லுவான். அப்புறம் வாட்ச்சைக் கொண்டுபோய், அடகுக்கடைல வைச்சிட்டு, சாப்பிடுவோம். அப்பலாம் சாப்பாடு 35 பைசாதான். அதுவும் முழுச்சாப்பாடு.

அப்புறம், எதாவது டிராமா வாய்ப்பு வரும். காசு கிடைக்கும். கடிகாரத்தைத் திருப்பிட்டு வந்து தருவான். இதுமாதிரி வாட்ச், அடகுக்கடைக்கு நிறைய முறை போயிட்டு போயிட்டு வந்திருக்கு.

இத்தனைக்கும் நானும் சரி, நாகேஷூம் சரி… வசதியானவங்கதான். ஆனா, ரெண்டுபேருமே இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம். ஜெயிச்சோம். தாமரைக்குளம்னு ஒரு படம். அதுலதான் அவனுக்கு வாய்ப்பு கிடைச்சிச்சு. ரெண்டு சீன் வருவான். முக்தா சீனிவாசன் படம் அது. அதுக்கு அவனுக்கு 90 ரூபா சம்பளம். ஆனா, எப்படியும் சினிமால நடிச்சு, சம்பாதிக்கலாம்னு தைரியமா ரயில்வே வேலையை விட்டான் நாகேஷ்.

‘எனக்கும் எதாவது டிராமால ஒரு சீனாவது நடிக்க வாய்ப்பு வாங்கிக்கொடுங்கன்னு ஒருத்தன் எங்ககிட்ட வருவான். அவனுக்கு அடிக்கடி ஏதாவது வாய்ப்பு வாங்கிக் கொடுப்போம். அப்புறம் அவன் பெரியாளானான். யார் தெரியுமா? அவன் தான் சுருளிராஜன்.

இவ்வாறு எஸ்.ஜே.சூர்யாவிடம் கவிஞர் வாலி தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close