[X] Close

நேசத்தின் ஞானத்தைச் சொன்னவர்


christmas-special

  • kamadenu
  • Posted: 20 Dec, 2018 16:47 pm
  • அ+ அ-

ஆர்.சி.ஜெயந்தன்

ஒர் இனிமையான கற்பனையைச் செய்துகொள்ளுங்கள். கால இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் செல்லும் காலத்தில் 24 மணி நேரத்துக்குமேல் நீங்கள் சஞ்சரிக்கமுடியாது. இந்தக் கால அவகாசம் போதும் என்று அதில் பயணிப்பதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, ஏறி அமர்ந்துவிட்டீர்கள். எந்திரத்தில் இருந்த ‘காலம் காட்டி’யில் ’இயேசு பிறந்திருந்த தினம்’ என டைப் செய்துவிட்டீர்கள். இயந்திரம் புறப்பட்டுவிட்டது.

2018 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்ததை உங்கள் உடல் உணர வில்லை. ஆனால் இயந்திரத்தின் கதவு திறந்தபோது உங்கள் உள்ளம் அதை உணர்ந்துவிட்டது. அதுவரை நீங்கள் உணர்ந்திராத உற்சாகமும் மகிழ்ச்சியும் உங்களைச் சில்லிட வைக்கிறது. அன்றைய ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியின் கீழ் இருந்த ஒரு பகுதி யூதேயா.

அதில் பெத்லஹேம் என்ற ஊரின் வயல்வெளியில்தான் உங்கள் இயந்திரம் தரையிறங்கியிருக்கிறது. எங்கும் போர்த்தியிருக்கும் பனியும் வானில் மின்னும் நட்சத்திரங்களும் உங்களை வரவேற்கின்றன.

அதோ… ஆடுகளை நம்பி வாழும் எளிய, சாமானிய மக்களாகிய மேய்ப்பர்கள் பலர் எங்கோ வேகவேகமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை நிறுத்திவிட்டீர்கள்.

உங்களது கூகுள் பர்ஃபெக்ட் ட்ரான்ஸ்லேட்டர் கருவியைப் பயன்படுத்தி அவரிடம் ‘எங்கே செல்கிறீர்கள்?’ என்று நீங்கள் கேட்டபோது அவர், எபிரேய மொழியில் பதில் அளித்தார். அது உங்களுக்குத் தமிழில் ஒலிக்கிறது. “நாங்கள் குளிரில் நடுங்கியபடி மந்தையைக் காத்துக்கொண்டிருந்தோம். அப்போது பிரகாசமான ஒளி எங்கள் முன்பாகச் சூழ்ந்தது. நாங்கள் பயந்து நடுங்கிக் கூர்ந்து கவனித்தபோது அந்தப் பிரகாசமான ஒளியின் நடுவே ஒரு தேவதூதர் நின்றுகொண்டிருந்தார்.

அவர் எங்களைப் பார்த்து ‘பயப்படாதிருங்கள்! நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்ல வந்திருக் கிறேன். இன்று, பெத்லகேமில் கடவுளின் மகனாகிய கிறிஸ்து பிறந்திருக்கிறார். அவர் மக்களை மீட்பார்! அவரைத் துணிகளில் சுற்றி தீவனத் தொட்டியில் படுக்க வைத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்’ என்று சொன்னார்.

அப்போது திடீரென மேலும் பல தேவதூதர்கள் தோன்றி கடவுளைத் துதித்துப்பாடி இனிய கீதம் இசைத்துவிட்டு மறைந்து போனார்கள். இன்னும் சற்று முன்பாக நீங்கள் வந்திருந்தால் அந்த அதிசயக் காட்சியை நீங்களும் கண்டிருக்கலாம். மன்னித்துவிடுங்கள்…தொடர்ந்து உங்களுடன் பேசிக்கொண்டிருக்க எங்களுக்கு நேரமில்லை.

நாங்கள் போய் பல காலமாக வேதமும் தீர்க்கதரிசிகளும் கூறிவந்த இறைமகன் பிறந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவரைத் தரிசிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால் கடவுளை மனித உருவில் குழந்தையாகக் காண்பது எத்தனை பெரிய பேறு!” என்று அவர் கூறிபோது, ‘நான் வந்ததும் அவரைக் காணத்தான் அய்யா!, நானும் உங்களோடு வரலாமா?’ என்று துடிக்கிறீர்கள்.

அந்த மேய்ப்பர் “தாராளமாக வாருங்கள். உங்களைப் பார்த்தால் வேறொரு தேசத்திலிருந்து வரும் பயணி என்று தெரிகிறது” என்று அவர் உங்களைத் தோழமையுடன் அழைத்துச் செல்கிறார். இதோ.. மேய்ப்பர்கள் ஒரு வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் குழந்தை இயேசுவைக் கண்டுபிடித்து விட்டார்கள்.

எதற்காக இந்த இடம்?

உண்மைதான்…! அது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. ஒரு தீவனத் தொட்டியில் வைக்கோல்களைப் போட்டு அதன்மேல் விரிக்கப்பட்டிருந்த துணியில் குழந்தை இயேசு கிடத்தப்பட்டிருக்கிறார். தெய்வீகப் புன்னகை முகத்தில் ஒளிர்கிறது. கடவுள் நினைத்திருந்தால் தங்கத் தொட்டிலில் பிறந்திருக்கலாம்.

ஆனால் ஏன் தீவனத் தோட்டியில் சிரித்துக்கொண்டிருக்கிறார். இந்த தேசத்தை ஆளும் அரசனுக்கும் இங்கே வாழும் அதிகாரிகளுக்கும் அறிஞர்களுக்கும் தனது மனித அவதாரத்தை அறிவிக்காமல் ஏன் எளிய மக்களாகிய மேய்ப்பர்களுக்கு அறிவித்திருக்கிறார்? தொழுவம் என்பது வீட்டு விலங்குகளுக்கு உணவிட்டுப் பராமரிக்கப்படுகிற ஒதுக்குப்புறமான இடம்.

தெய்வக் குழந்தை பிறப்பதற்கு ஏற்ற இடமா இது! அவர் நினைத்திருந்தால், தற்போது இந்தப் பகுதியை ஆண்டுகொண்டிருக்கும் சீசர் அகஸ்டஸ் போல ஆடம்பர அரண்மனையில் பிறந்திருக்கலாம். ஆனால் ஏன் கடவுள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்விக்கான பதிலைத் தேடுகிறீர்கள். உங்களுக்குப் பதிலும் கிடைக்கிறது.

கடவுள் பூமிக்கு வந்தது அதிகார பலத்தைக் காட்ட அல்ல, மனித குலத்துக்கு தனது கருணையின் எல்லையைக் காட்ட. அதிகாரத்தில் இருப்பவர்களின் அகந்தையை அகற்ற. பிறப்பால் உயர்வு, தாழ்வு காணும் உள்ளத்தின் அழுக்கினைக் கழுவ தொழுவத்தில் பிறந்த மனிதத்தின் தோழர்.

அரசனும் கடவுளும்

ஒவ்வொருவரும் தங்கள் பெயரைப் பதிவு செய்வதற்காக தங்களுடைய பிறந்த ஊருக்கு வரவேண்டும் என்று ரோம சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன் சீசர் அகஸ்டஸ் ஒரு சட்டத்தைப்போட்டான். இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய ஜோசப்பின் பிறந்த ஊர் பெத்லகேம். எனவே பெயரைப் பதிவு செய்ய அவரும் நிறைமாதக் கர்ப்பிணியான மரியாளும் இங்கே வந்திருந்தபோது அவர்களுக்குக் கிடைத்தது இந்தத் தொழுவம்தான்.

அதை அந்த பெற்றோர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அவர்களது முகங்களில் எத்தனை மகிழ்ச்சி பொங்கி வழிகிறது! அரசனோ தான் ஆடம்பரமாக வாழவும் மக்களிடம் மேலும் வரி வசூலிக்கவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் செய்ய உத்தரவிடுகிறான்.

தனது ஆட்சியின்கீழ் எத்தனை கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்ற அதிகாரத்தைக் காட்ட விழைகிறான். ஆனால் அந்த அரசனின் ராஜ்ஜியத்தின் ஒரு மூலையில் அவன் அறிந்தும்கூட இருக்கமுடியாத ஒரு சிற்றூரில் கழுதைகளுக்கான உணவுத் தொட்டியில் தூங்கி, கடவுளுடைய குமாரன் கண்விழிக்கும் காட்சியில் உங்கள் உள்ளம் பனியாய் கரைந்தோடுகிறது.

நீங்களும் ஞானி

அந்தச் சமயத்தில் கீழ்த்திசை தேசங்களைச் சேர்ந்த மூன்று ஞானிகள் தொழுவத்தை வந்து அடைகிறார்கள். ஆச்சரியம்! நாம் மட்டும்தான் இயேசுவைக் காணவந்த பயணி என்று நினைத்தோம். வெவ்வேறு தேசங்களிலிருந்து டிரெஸ், ரேயெஸ், மேகோஸ் ஆகிய மூன்றுபேர் எப்படி இங்கே வந்தார்கள்! மேகோஸிடம் நீங்கள் கேட்டே விட்டீர்கள்.

“எங்களுக்கு வழிகாட்டியபடி கிழக்கு வானில் நகர்ந்து வந்த வால் நட்சத்திரம், இறைமகன் பிறந்திருக்கும் இந்தத் தொழுவத்துக்கு மேலாக வந்து நகராமல் நின்றுவிட்டது. இது எங்கள் தேடலுக்குக் கிடைத்த பரிசு” என்று கூறிவிட்டு பொன்னையும் வெள்ளைப் போளத்தையும் தெய்வக் குழந்தையின் முன்னால் காணிக்கையாக வைத்து வணங்கிவிட்டு நிறைவோடு தங்கள் ஒட்டகங்களில் ஏறி திரும்பிச் சென்றார்கள்.

இயேசுவைக் குழந்தையாகக் கண்டதில் தன்னிலை மறந்திருந்த உங்களுக்கு, இப்போது உங்கள் கால இயந்திரத்தின் நினைவு வருகிறது. மனிதர்கள் மீது கடவுள் கொண்டிருந்த பேரன்பைக் குழந்தை வடிவில் கண்டுவிட்ட உங்கள் உள்ளம் அன்பால் நிறைந்து வழிகிறது. அதை அனைவருக்கும் கொடுக்க நிகழ்காலத்துக்குத் திரும்புகிறீர்கள்.

மற்றவர்களுக்குக் கொடுப்பதில் மிகச்சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு இறைமகன் உங்களுக்குக் கொடுத்த பேரன்பு என்பதை உணர்ந்து நீங்களும் இப்போது ஞானி ஆகியிருக்கிறீர்கள். அன்பின் வடிவம் அரவணைப்பும் ஆறுதலும் பாதுகாப்பு தருதலும் மட்டுமல்ல; மிக முக்கியமாக இல்லாதவர்க்கு ஈவதும்தான்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close