[X] Close
 

மோசடியாளர்களின் சொத்துகள் பறிமுதல்: புதிய மசோதாவைக் கொண்டுவர அரசு முடிவு


the-confiscation-of-the-property-of-the-fraudsters-the-government-decided-to-bring-the-new-bill

  • Team
  • Posted: 27 Feb, 2018 06:03 am
  • அ+ அ-

வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் மசோதா ஒன்றைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு வழக்கைத் தவிர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுபவர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்ப மறுப்பவர்கள் போன்றவர்களின் சொத்துகளை இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் பறிமுதல் செய்யமுடியும்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நீரவ் மோடி மற்றும் குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருப்பது, டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸில் ரூ.389 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி இருப்பது போன்ற காரணங்களால் இந்த மசோதாவுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

மற்ற நாடுகளின் பொருளாதார மோசடி தொடர்பான சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த மசோதாவுக்கான வரைவு கடந்த மே மாதம் கருத்துக் கேட்புக்கு விடப்பட்டிருந்தது. சட்ட அமைச்சகம் சில ஆலோசனைகளோடு இந்த வரைவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது. 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொருளாதார மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பியோடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி மோசடி செய்து இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நாடு திரும்ப மறுத்ததால் இத்தகைய சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது.

இந்த மசோதாவினால் பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பணமோசடி தடுப்பு சட்டத்தின் மூலம் அமலாக்கத்துறை பறிமுதல் செய்யும். குற்றவாளிகள் நாடு திரும்ப தொடர்ந்து மறுக்கும் பட்சத்தில் கடன் கொடுத்தவர்களுக்கான தொகையை சொத்துகளை விற்று அமலாக்கத்துறை திருப்பிக் கொடுக்கும். இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்பு சட்டம், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய சட்டம், சுங்க சட்டம், நிறுவனங்கள் சட்டம், எல்எல்பி சட்டம், புதிய திவால் சட்டம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி மற்றும் நிதி சார்ந்த குற்றங்களுக்கு இந்த மசோதா செல்லுபடியாகும் என வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. - பிடிஐ

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close