[X] Close
 

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையைக் குறைத்தது எஸ்பிஐ


sbi-slashes-charges-for-non-maintenance-of-minimum-balance

  • பாரதி
  • Posted: 13 Mar, 2018 11:51 am
  • அ+ அ-

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையை எஸ்பிஐ வங்கி குறைத்தது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அபராத குறைப்பு அமலுக்கு வரும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையானது மெட்ரோ பெருநகரங்களுக்கு எவ்வளவு சிறு நகரங்களுக்கு எவ்வளவு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் 5,000 ரூபாய், நகர்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 ரூபாய், சிறு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக வைத்திருக்க வேண்டும் என்பது அமலில் உள்ளது.
குறிப்பிடப்பட்ட இந்த அளவு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.


எவ்வளவு குறைப்பு?
பெரு நகரங்கள், சிறு நகரங்களில் கணக்கு வைத்திருக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால் வசூலிக்கப்படும் அபராதம் ரூ.50-ல் இருந்து ரூ.15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டியை தவிர்த்து அளவிடப்பட்டுள்ளது.
அதேபோல், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால் மாதந்தோறும் வசூலிக்கப்படும் அபராதத் தொகையானது முறையே ரூ.40-ல் இருந்து ரூ.12 ஆகவும், ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஜிஎஸ்டி தவிர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்பிஐ தரப்பில், "எங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு நாங்கள் இந்த அபராதத் தொகையைக் குறைத்துள்ளோம். அதேபோல், வாடிக்கையாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கை பிஎஸ்பிடி கணக்காக மாற்றிக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய பிஎஸ்பிடி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டாலும்கூட எவ்வித அபராதக் கட்டணங்களும் விதிக்கப்படுவதில்லை.
அதேபோல், சேமிப்புக் கணக்கை பிஎஸ்பிடி கணக்காக மாற்ற எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய அறிவிப்பின் மூலம் 25 கோடி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் எனவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏஎன்ஐ

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close