[X] Close

புதிதாக 29 ஆயிரம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் -ஏர்செல் மூடப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் ஆர்வம்


new-customers-in-bsnl

  • முகமது சல்மான்
  • Posted: 09 Mar, 2018 12:18 pm
  • அ+ அ-

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிரச்சினையால், கடலூர் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் புதிதாக 24 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனம் கிராமங்கள் தோறும் செல்லிட பேசிக்கான கோபுரங்களை அமைத்திருந்தும், தனியார் நிறுவனங்களை விட குறைவான அளவுக்கே வாடிக்கையாளர்களையே கொண்டு இயங்குகிறது.

தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி சேவையையே வழங்கி வருகிறது.

பிஎஸ்என்எல் உற்சாகம்

இதனால், தனியார் நிறுவனங்களுடன் சந்தையில் தீவிரமாகப் போட்டியிட முடியவில்லை. தற்போது புதிய உறுப்பினர்களின் சேர்க்கையால் பிஎஸ்என்எல் நிறுவனம் உற்சாகம் அடைந்துள்ளது.

தற்போதைய சூழலில், ஏர்செல் வாடிக்கையாளர்களைக் கவர்வதில் அனைத்து தனியார் நிறுவனங்களும் முனைப்புக் காட்டி வருகின்றன.அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனமும் போட்டியில் குதித்துள்ளது. இதில் எதிர்பார்த்ததை விட அதிகமான அளவுக்கு புதிதாக வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

இதுதொடர்பாக கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் பொது மேலாளர் ஜெயக்குமார் ஜெயவேலு தெரிவித்துள்ள விவரம்:

ஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தவுடன் அதிகமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்லை நாடியுள்ளனர்.

முதலில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி வரை கடலூர், விழுப்புரம், புதுச்சேரியைக் கொண்ட கடலூர் தொலைத் தொடர்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 946 பேர் புதிய வாடிக்கையாளர்களாக இணைந்தனர். பிப்ரவரி 28ம் தேதி இந்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 232 ஆக உயர்ந்தது. மார்ச் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை 5,500 புதிய வாடிக்கையாளர்களின் சிம் கார்டுகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதைவிட 3 மடங்கு அதிகமான சிம் கார்டுகள் வழங்கப்பட்டு, அவை இயக்கி வைக்கும் நிலையில் உள்ளது. ஏர்செல்லிலிருந்து மாறுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய எண் கிடைக்காமல் அவர்கள் காத்திருக்கின்றனர்.

புதிய சலுகைகள் அறிமுகம்

அவர் மேலும், கூறியதாவது:

ஏர்செல் நிறுவனத்திலிருந்து மாறும் வாடிக்கையாளர்கள் அரசுத் துறை நிறுவனமே நம்பகமானது என்று எண்ணுகின்றனர். இதன் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை நாடி வருகின்றனர். அவர்களை வரவேற்கும் விதமாக புதிய சலுகைகளை அறிமுகம் செய்துள்ளோம்.

இலவச சிம் கார்டு வழங்கி, அதற்கு 10 ரூபாய்க்கான ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ. 35 டாக் டைம் வழங்குகிறோம். 100 குறுந்தகவல்கள், 350 எம்பி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் 40 இடங்களில் வாரந்தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி, புதிய வாடிக்கையாளர்களை இணைத்து வருகிறோம்.

எங்களிடமுள்ள 3, 800 முகவர்களிடமும் சிம் கார்டு விற்பனையை அதிகப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். மக்களின் நம்பிக்கையைப் பெறும் பொதுத்துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் உருவாகியுள்ளது.

அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் இணைப்பே இதற்குச் சான்றாகும் என்று தெரிவித்துள்ளார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close