[X] Close

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 500 கோடி டாலர் அபராதம்


500

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 08:02 am
  • அ+ அ-

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 500 கோடி டாலர் அபராதத்தை அமெரிக்க பெடரல் வர்த்தக கமிஷன் (எஃப்டிசி) விதித்துள்ளது. தொழில் நிறுவனத்துக்கு மிக அதிக அளவு அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட 2.20 கோடி டாலர் அபராதமே மிக அதிக அளவாக இருந்தது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், மிக அதிக அளவிலான அபராதம் விதிக்கப்பட்டது அந்நிறுவன வருமானத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இத்தகைய அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் தனது செயல்பாடுகளில் அதிக அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்று தெரிகிறது.

தனிநபர் தகவல் காப்பு விதிகளை மீறியதோடு அந்த தகவலை தவறாக பயன்படுத்தியதற்காக இத்தகைய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக எஃப்டிசி மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

அபராதம் விதிப்பது தொடர்பான வாக்கெடுப்பில் 3-2 என்ற விகிதத்தில் குடியரசு கட்சியினரும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு இனி நீதித்துறையின் ஆய்வுக்கு அனுப்பப்படும். நீதித்துறையில் இதன் மீது எவ்வளவு காலத்தில் தீர்ப்பு வெளியாகும் என்ற விவரம் வெளியாகவில்லை. பொதுவாக நிறுவனங்களுக்கு 500 கோடி டாலர் அபராதம் என்பது மிகப் பெரும் தொகை. ஆனால் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இது பெரிய தொகையாக இருக்காது. ஏனெனில் கடந்த ஆண்டு இந்நிறுவனம் 5,600 கோடி டாலரை வருமான மாக ஈட்டியுள்ளது. நடப்பாண்டில் நிறுவன வருமானம் 6,900 கோடி டாலராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிறுவன வருமானத்திலிருந்து இந்த அபராதத் தொகையை எளிதாக ஃபேஸ்புக் செலுத்திவிடும் என்று தெரிகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஃபேஸ்புக் பயனர்களின் தகவலை கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனத்துக்கு அளித்ததாக அந்நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முன்பு ஆஜராகிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் மன்னிப்பு கோரியிருந்தார். இருப்பினும் இந்த அளவு அதிகமான அபராதத் தொகை விதிக்கப்படக்கூடாது என்றே ஃபேஸ்புக் நிறுவன முதலீட்டாளர்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

தவறுக்கு அபராதமாக 300 கோடி டாலர் விதிக்கப்படலாம் என்றும், ஒருவேளை இது 500 கோடி டாலர் வரை செல்லக்கூடும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் எதிர்பார்த்திருந்தது.

ஃபேஸ்புக் நிறுவனம் மீது விதிக்கப்பட்ட அபராதமானது அதன் மணிக்கட்டை பிடித்திருக்கும். அந்நிறுவனத்தின் மீது விழுந்த பெரிய அடி அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவருமான ரிச்சர்டு புளுமென்தால் குறிப்பிட்டுள்ளார். ஆண்டுதோறும் கோடிக் கணக்கில் வருவாயை ஈட்டும் நிறுவனம் சட்டவிரோதமாக செயல்பட்டால் இதுதான் தண்டனை என்பதை அறிவுறுத்தும் விதமாக அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நிறுவன செயல்பாடுகளில் எத்தகைய மாற்றங்களைச் செய்யவேண்டும், பயனர்களின் தகவலை பாதுகாக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டுதலை எஃப்டிசி விதித்ததா என்பது தெரியவில்லை.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் ஓராண்டுக்கு முன்பு மிகப் பெரும் அதிர்வலையை கிளப்பிய நேரத்தில் எஃப்டிசி தனது விசாரணையைத் தொடங்கியது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக 8.7 கோடி ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு ஒருதரப்பாக பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த நடவடிக்கையானது 2011-ம் ஆண்டு எஃப்டிசி வகுத்தளித்த விதிமுறைகளுக்கு முரணானது என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த அபராதத்துடன் ஃபேஸ்புக் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமல்ல. அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் இந்நிறுவனம் மீது வழக்குகள் உள்ளன. ஐரோப்பிய யூனியனில் 12-க்கும் மேலான வழக்குகள் இந்நிறுவனம் மீது உள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close