[X] Close

பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள திட்டங்கள், மதிப்பீடுகள் அனைத்தும் சாத்தியம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:37 am
  • அ+ அ-

2019-20-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள், மதிப்பீடுகள் அனைத்துமே நடைமுறை சாத்தியமானவை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் பேசியதாவது:

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும், மதிப்பீடுகளும் நடைமுறை சாத்தியமானவை. வேளாண் துறைக்கு முன்னுரிமை மற்றும் முதலீடுகள் அதிகரிப்பு மூலம் 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக நாட்டின் பொருளாதாரம் வளரும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் துறை வாரியான செலவுகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராணுவம், ஓய்வூதியம், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊதியம் வழங்க போதிய நிதி ஆதாரங்கள் வரி மூலமும் பிற இனங்கள் வாயிலாகவும் கண்டறியப்பட்டுள்ளன. நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்கும் அதே நேரத்தில் முதலீடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது திட்டமிடாமல் மேற்கொள்ளப்பட்ட வெறும் அறிவிப்பு அல்ல

. 2.7 டிரில்லியன் பொருளாதாரமாக உள்ளதை 5 டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது, முதலீடுகளை ஈர்க்க நேரடி அந்நிய முதலீட்டுக்கான விதிகளை தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.400 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பேட்டரி வாகனங்களை ஊக்குவிப்பதற்காக அதற்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள், வியாபாரிகளுக்கான விருப்ப ஓய்வு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.100 லட்சம் கோடி அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

``மேக் இன் இந்தியா’’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் சில மூலப் பொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு ரொக்க நிதி உதவித் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மேலும் வேளாண் துறை வளர்ச்சியைக் கண்காணிக்க பிரதமர் தலைமையில் 5 பேரடங்கிய அமைச்சரவை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம், பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கையில் எட்ட முடியாத அளவுக்கு வரி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், வருமான வரி, உற்பத்தி வரி மற்றும் ஜிஎஸ்டி வருவாய் ஆகியவற்றை பட்டியலிட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டக் கூடியதுதான் என்று கூறினார்.

பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு கூடுதலாக 2 ரூபாய் உற்பத்தி வரி விதிக்கப்பட்டதால் உற்பத்தி வரி வருவாய் அதிகரிக்கும் என்றார். ஜிஎஸ்டி விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த வருவாயும் 14 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பட்ஜெட்டில் உறுதியான சீர்திருத்த நடவடிக்கைகள் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்ததைக் குறிப்பிட்ட அவர், ஜிஎஸ்டி மற்றும் திவால் மசோதா ஆகியன அடிப்படையிலான சீர்திருத்த நடவடிக்கை என்றார். மொத்தம் 16 வகையான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் பட்டியலிட்டார்.

பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு அதை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த பட்ஜெட்டில் திட்ட இலக்குகள் உள்ளன. அடுத்த 10 ஆண்டுக்கான இலக்கு உள்ளது. அதில் இடைக்கால இலக்குதான் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவது என்றார்.

வேளாண் துறைக்கான முதலீடுகளை அதிகரிப்பது, சுகாதாரத் துறை முதலீடுகளை அதிகரிப்பது ஆகிய பிரதான நோக்கங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன என்றார்.

பட்ஜெட்டுக்கு முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்ட புள்ளி விவரங்களும், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட புள்ளி விவரங்களும் அதிகாரபூர்வமானவை என்றார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளில் ரூ.3.19 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார். வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினைக்கு அரசு ஒருங்கிணைந்த தீர்வை கண்டுள்ளது என்றார்.

விவசாயிகளுக்கு நேரடி உதவி அளிக்கும் விதமாக ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 தொகை வழங்கப்படுகிறது. வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு மூலம் 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close