[X] Close

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை கிரீன் கார்ட் வழங்குவதற்கு இருந்த வரம்பு நீக்கம் இந்தியர்களுக்கு அதிக பலன்


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 08:33 am
  • அ+ அ-

அமெரிக்காவில் பணிபுரியும் பிற நாட்டினர்கள், நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு இருந்த வரம்பை ரத்து செய்வவதற்கான மசோதா புதன்கிழமை அன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கா அரசு, தனது நாட்டில் பணிபுரியும் பிற நாட்டினர்கள் நிரந்தரமாக குடியேறுவதற்கு கிரீன் கார்ட் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கிரீன் கார்ட் வசதியை பெறுவதற்கு லட்சக் கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். வரும் விண்ணப்பங்களில், ஒவ்வொரு நாட்டுக்கும், வேலை தொடர்பாக குடியேற அந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட விசாவில் 7 சதவீத அளவில் மட்டுமே அமெரிக்க அரசு கிரீன் கார்ட் வழங்கி வந்தது. தற்போது அந்த வரம்பை முழுவதுமாக நீக்கியுள்ளது. மட்டுமல்லாமல் குடும்பம் சார்ந்து குடியேறுவதற்கு 7 சதவீதமாக இருந்த வரம்பை 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் வேலை வாய்புக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் மிகவும் பயன்பெறுவார்கள்.

‘ஹெச்ஆர் 1044’ என்று தலைப்பிடப்பட்ட அந்த மசோதா கடந்த புதன் கிழமை அன்று நாடளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 435 உறுப்பினர்களில் 365 உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

ஆண்டுதோறும் மென்பொருள் துறை பணி சார்ந்து பல்லாயிரக் கணக்கில் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். வெளிநாட்டு ஊழியர்களின் அதிகரிப்பால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாக கூறப்பட்டு H-1B விசா மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் பணி சார்ந்து அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர். தற்போது கிரீன் கார்டுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இருப்பதால் இந்தியர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில், இந்த மசோதா அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட இருக்கிறது.

இந்த மசோதா குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜான் க்ரூட்ஸ் கூறியபோது, ‘‘இந்த மசோதாவால் அமெரிக்காவில் பணி புரியும் பிற நாட்டினர்கள் மிகுந்த பயன் அடைவார்கள். இதனால் பல திறமைவாய்ந்த நபர்களை அமெரிக்க நிறுவனங்களால் பணியில் அமர்த்த முடியும். இது நாட்டின் பொருளாதாரத்தை வளம்பெறச் செய்யும்’’ என்றார்.

இந்த தீர்மானத்தை அமெரிக்காவாழ் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். அமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை பெரிதாக வரவேற்றுள்ளன. அமெரிக்க அதிபரின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பும்படி இந்நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

இதுவரை இருந்து வந்த குடியுரிமை வரம்பின் படி, அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களில் 25 சதவீதத்தினர்களுக்கு மட்டுமே கிரின் கார்ட் வழங்கப்பட்டு வந்தது. இந்த புதிய தீர்மானத்தால் நிரந்த அமெரிக்க குடியுரிமை பெறும் இந்தியர்களின் சதவீதம் 90 ஆக உயரும் என்று கூறப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close