[X] Close

பங்கு விலக்கல் நடவடிக்கைகள் மிகுந்த பாதுகாப்போடு மேற்கொள்ளப்படும்: மாநிலங்களவையில் அமைச்சர் உறுதி


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 07:51 am
  • அ+ அ-

-,

பொதுத் துறை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பங்கு விலக்கல் நடவடிக்கைகள் மிகுந்த பாதுகாப்பு உணர்வோடு மேற்கொள்ளப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் உறுதிபட தெரிவித்தார்.

அரசு நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான கருவிகளை சப்ளை செய்யும் பிஇஎம்எல் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், பிஇஎம்எல் நிறுவனத்தில் அரசுக்கு 54.03 சதவீத பங்கு உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு பங்குகளை விற்கும் முன்பு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கை உத்திசார் அடிப்படையில் மேற்கொள்வது தொடர்பாக நிதி ஆயோக் உரிய வழிகாட்டுதலை வகுத்துள்ளது. பங்கு விலக்கல் நடவடிக்கை எடுக்கும்போது தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு தேச நலனுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்றார்.

பிஇஎம்எல் நிறுவனம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இதில் ராணுவத்துக்கான பொருள் தயாரிப்பு 16.16 சதவீதம். ரயில்வேவுக்கான தயாரிப்பு 31.12 சதவீதம். சுரங்கம் மற்றும் கட்டுமான துறைக்கான தயாரிப்பு 52.27 சதவீதமாக உள்ளது.

பிஇஎம்எல் நிறுவனம் 100 சதவீதம் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபடவில்லை என்று கூறியவர், பங்கு விலக்கலுக்கென தனியே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். பங்கு விலக்கல் நடவடிக்கைக்கு முதல்கட்ட ஒப்புதல்தான் தரப்பட்டுள்ளது. வாங்கும் தகுதி படைத்த நிறுவனத்திடம் நிர்வாகத்தை ஒப்படைப்பதற்காக 26 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபடுவதை அரசு ஊக்குவிக்கிறது.

அத்தகைய நடவடிக்கையின் ஒரு பகுதியாக பங்கு விலக்கல் நடவடிக்கையும் அமையும். உத்திசார் அடிப்படையில் பங்கு விலக்கல் நடவடிக்கை என்பதில் 16 நிலைகள் உள்ளன. பிஇஎம்எல் பங்கு விலக்கலில் இதுவரை 5 நிலைகள்தான் பூர்த்தியாகியுள்ளன என்றார். மேலும் கூடுதலாக பிஇஎம்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தனியாக மேற்கொள்ளப்படும் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close