[X] Close

ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகள் மூலம் அரசுக்கு ரூ.1.06 லட்சம் கோடி டிவிடெண்ட்


1-06

  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 08:58 am
  • அ+ அ-

மத்திய அரசுக்கு பொதுத்துறை வங்கிகள், ரிசர்வ் வங்கி அளிக்கும் ஈவுத் தொகை (டிவிடெண்ட்) மற்றும் கூடுதலாக வழங்க உள்ள உபரித் தொகை மூலம் ரூ.1.06 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர அரசு மேற்கொள்ள உள்ள பங்கு விலக்கல் நடவடிக்கை மூலமும் கூடுதல் நிதி கிடைக்கும். இதனால் அரசின் நிதிப் பற்றாக்குறை 3.4 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாக குறையும் என்று தெரிகிறது.

பொத்துறை வங்கிகள் அளிக்கும் டிவிடெண்ட் மற்றும் ரிசர்வ் வங்கி அளிக்கும் உபரி நிதி மூலம் ரூ.1,06,041 கோடி கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது பட்ஜெட் எதிர்பார்ப்பு அளவான ரூ.54,817 கோடியை விட அதிகமாகும்.

கடந்த நிதி ஆண்டில் திருத்திய மதிப்பீட்டின்படி டிவிடெண்ட் மற்றும் உபரி நிதி மூலம் ரூ.74,140 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நடப்பாண்டில் ரிசர்வ் வங்கி ரூ.90,000 கோடியை அளிக்கும் என எதிர்பார்ப்பதாக நிதித்துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். அவ்விதம் அளித்தால் ரிசர்வ் வங்கி இதுவரை அளித்த நிதி அளவைக் காட்டிலும் மிக அதிக அளவாக இருக்கும். கடந்த பிப்ரவரியில் ரூ.28 ஆயிரம் கோடியை இடைக்கால டிவிடெண்டாக வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது.

ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி ஈவுத் தொகையை அரசுக்கு அளிக்கிறது. ரூபாய் நோட்டு அச்சடித்தல் மற்றும் ஆர்பிஐ மேற்கொண்ட முதலீடுகள் மூலமாக கிடைக்கும் லாபத்தில் அரசுக்கு ஈவுத் தொகையை வழங்கி வருகிறது. இந்தத் தொகையானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி இடைக்கால டிவிடெண்ட் தொகையை மட்டுமே அரசுக்கு அளித்து வருகிறது.

சமீப காலமாக அரசு தங்கள் சிறப்பு செயல் திட்டங்களை மேற்கொள்ள கூடுதல் நிதியை ரிசர்வ் வங்கியிடமிருந்து எதிர்பார்க்கிறது. உபரி நிதியை வழங்க வேண்டும் என்ற பிரச்சினையில் ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் மோதல் வெடித்தது. இதனால் அப்போது ஆர்பிஐ கவர்னராயிருந்த உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ரிசர்வ் வங்கி எவ்வளவு தொகையை உபரி நிதியாக கையிருப்பில் வைத்துக் கொள்ளலாம் என்பதை வகுக்க ஒரு பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவும் அறிக்கையை அளித்துவிட்டது. இதனால் அரசுக்கு கூடுதல் நிதி கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close