[X] Close

நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு ரூ.74,000 கோடி


74-000

  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 09:03 am
  • அ+ அ-

அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(பிஎஸ்என்எல்) மற்றும் மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) இரண்டும் கடும் இழப்பை சந்தித்து வரும் நிலையில், ரூ.74,000 கோடியை மீட்புத் தொகையாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரண்டும் பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆகும். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய புதிய திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வரும் நிலையில் அவற்றிற்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்த அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. கடந்த நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் சுமார் ரூ.13,804 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. எம்டிஎன்எல் நிறுவனம் ரூ.3,398 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளது. இந்நிலையில் ரூ.74,000 கோடியை மீட்புத் தொகையாக வழங்க அரசு முன்வந்திருக்கிறது. இதன்படி, ரூ.20,000 கோடியை 4 ஜி தொழில்நுட்பத்திற்காகவும், ரூ.40,000 கோடியை விருப்ப ஓய்வு திட்டத்துக்கான சலுகைகளுக்காகவும், ரூ. 13,000 கோடியை நிறுவனத்தின் மூலதன செலவுக்காகவும் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரு நிறுவனங்களை நஷ்டத்திலிருந்து மீட்பது குறித்து அரசு வெவ்வேறு சாத்தியங்களை பரிசீலித்து வருகிறது. அதில் ஒன்றாக, ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை 60 வயதிலிருந்து 58ஆக குறைக்க அரசு யோசித்து வருகிறது. தவிர்த்து, பணிக் காலம் முடியும் முன்பே விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தும் அளவிற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை. தற்போது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 4ஜி தொழில்நுட்பத்திலிருந்து 5 ஜி தொழில்நுட்பத்திற்கு மாறத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்னும் 4 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவில்லை.

மோசமான நிர்வாகம் மற்றும் அரசின் தேவையற்ற தலையீடு காரணமாகவும் இந்த இரு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒரு வாடிக்கையாளருக்கு சராசரியாக ரூ.70ஐ வருமானமாக ஈட்டிக் கொண்டிருக்கும் நிலையில், அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.38ஐ வருமானமாக ஈட்டுகின்றன. இந்நிலையில் அரசின் மீட்புத் தொகை திட்டம் குறித்து தொலைத்தொடர்பு துறை கூறியதாவது, நஷ்டத்தில் இயங்கும் இந்த இரு நிறுவனங்களை மூடுவதற்கு கிட்டத்தட்ட ரூ.1.2 லட்சம் கோடி அளவில் செலவாகும். மட்டுமல்லாமல், இந்த இரு பொதுத் துறை நிறுவனங்களை மூடுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கும் இந்நிறுவனங்களை மீட்பதற்கு ரூ.74,000 மீட்புத் தொகையாக வழங்க முன்வந்திருப்பது சிறந்த முடிவாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close