[X] Close

இந்தியாவுக்கு ரூபாயில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய தயார்: ஈரான் அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 16:30 pm
  • அ+ அ-

அமெரிக்காவின் தடையை பற்றி கவலையில்லை, இந்தியாவுக்கு ரூபாயை பெற்றுக் கொண்டு சகாயமான விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது  பொருளாதர தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

எனினும், இந்தியாவும் தோழமை நாடுகள் சிலவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஈரானிடமிருந்து பெறும் எண்ணெயை வேறு இடங்களிலிருந்து வாங்கிக்கொள்ள ஆறு மாத கால அவகாசத்தை அமெரிக்கா வழங்கியது.

இந்த அவகாசம் மே 2-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஈரானிடமிருந்து பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் அல்லது நாங்கள் எடுக்கும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எதிர்கொள்ளுங்கள் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்வதாக இந்தியா அறிவித்தது. ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியளவுக்கு சில பொருட்களையும், மீதி பாதி அளவுக்கு ரூபாயிலும் இந்தியா செலுத்தி வந்தது.

இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறையாமல் தேவையான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. இதையடுத்து அமெரிக்காவை சமரசம் செய்யும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. அண்மையில் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோவிடம் இதுபற்றி பேசப்பட்டது. எனினும் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்  ஏற்றுமதி செய்வதை தொடர ஈரானும் விரும்புகிறது.

இந்தநிலையில் இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி சேகேனி கூறியதாவது:

இந்தியாவுக்கு சகாயமான விலையில், கச்சா எண்ணெய் வழங்க ஈரான் எப்போதுமே விருப்பமுடன் இருந்து வருகிறது. நட்பு நாடான இந்தியாவின் நலனில் ஈரான் அக்கறை கொண்டுள்ளது. எந்த நாடு தடை செய்தாலும், ஈரான் - இந்திய நல்லுறவு, வர்த்தகம் பாதிக்கப்படாது. இந்திய ரூபாயில் அல்லது ஐரோப்பிய கரன்ஸியில் கச்சா எண்ணெய் சப்ளை செய்ய தயாராக இருக்கிறோம்’’ எனக் கூறினார்.  

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close