[X] Close

என்பிஎஃப்சிகளை ஒழுங்குபடுத்த ஆர்பிஐ-க்கு கூடுதல் அதிகாரம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்


  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 07:28 am
  • அ+ அ-

வங்கியல்லாத நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கிக்கு அதிக அதிகாரம் வழங்க அரசு முயற்சி மேற்கொண்டுவருவதாக நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் நிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்று கூறினார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது, “வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் எனப்படும் என்பிஎஃப்சிகளின் நிதி நிலையும், செயல்பாடுகளும் ஆரோக்கியமாக இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். எனவே ரிசர்வ் வங்கி அந்தத் துறையை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. என்பிஎஃப்சிகளின் செயல்பாடுகள், பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ரிசர்வ் வங்கி என்பிஎஃப்சிகளின் ஸ்திரமான வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளையும் திட்டமிட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கிக்கான அதிகாரத்தை அதிகப்படுத்தவும், அதன் கண்காணிப்பு வரம்புகளை விரிவுபடுத்தவும் பரிந்துரைகள் அரசுக்கு வந்துள்ளன. அவை பரிசீலனையில் உள்ளன. என்பிஎஃப்சிகளை ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவும் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

மேலும் அரசுத் துறை என்பிஎஃப்சிகளில் அவற்றின் செயல்பாட்டு தேவைக்கேற்ப மூலதனமும் தொடர்ந்து அரசால் வழங்கப்படும் என்று அவர் கூறினார். ஆனால், தனியார் என்பிஎஃப்சிகளுக்கு எந்த மூலதன உதவி குறித்தும் அரசு முடிவெடுக்கவில்லை.

2019 ஜூன் 23 நிலவரப்படி 9,643 வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்துள்ளன. 2018-19 நிதி ஆண்டில் என்பிஎஃப்சிகளின் வாராக்கடன் விகிதம் 6.6 சதவீதமாக உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இது 5.3 சதவீதமாக இருந்தது. அரசுக்குச் சொந்தமான ஐஎல் அண்ட் எஃப்எஸ் என்ற என்பிஎஃப்சி சில மாதங்களுக்கு முன் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி வரையிலான வாராக்கடனில் சிக்கி திவாலாகும் நிலைக்கு ஆளானது. இதனால் ஒட்டுமொத்த நாட்டின் என்பிஎஃப்சிகளிலும் பணப்புழக்கம் பாதித்தது. இதையடுத்து அரசு என்பிஎஃப்சிகளில் கூடுதல் கவனத்தையும் கண்காணிப்பையும் செலுத்த ஆரம்பித்தது. ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவன கணக்குகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

‘குண்டர்களை நியமிக்க வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை’

வாடிக்கையாளர்களிடமிருந்து கடனை வசூலிக்க குண்டர்களை நியமிக்க எந்த வங்கிக்கும் அதிகாரம் கிடையாது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகுர் கூறினார்.

மக்களவையில் அவர் மேலும் கூறியதாவது: கடனை வசூலிக்க தனியார் நிறுவனங்களை நியமிக்கலாம். ஆனால் அத்தகைய நிறுவனங்கள் காவல்துறை விசாரணைக்குப் பிறகே நியமிக்கப்பட வேண்டும். கடனை கட்டாயப்படுத்தி வசூலிக்க குண்டர்களையோ அல்லது பலப்பிரயோக நடைமுறையையோ செயல்படுத்த எந்த வங்கிக்கும் அதிகாரம் இல்லை என்றார். கடன் வசூலிப்பதில் நேர்மையான நடைமுறை குறித்த வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. எந்த வங்கியாவது தவறாக அதிகாரத்தை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close