[X] Close

ஜிஎஸ்டி வருவாய் உயரும் பட்சத்தில் இரண்டு விதமான வரி வரம்புகள் மட்டுமே இருக்கும்: அருண் ஜேட்லி கருத்து


  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 07:27 am
  • அ+ அ-

ஜிஎஸ்டி நுகர்வோருக்கும் வரி செலுத்துவோருக்கும் மிகவும் எளிதானது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் வரி வருவாய் உயரும்போது ஜிஎஸ்டியில் 12 மற்றும் 18 சதவீத வரம்புகள் ஒரே வரம்பாக நிர்ணயிக்கப்படலாம் எனவும் கூறியுள்ளார். 2017 ஜூலை 1-ல் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தினார் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஜிஎஸ்டி குறித்து தனது கருத்துகளை வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது முரண்பாடான கருத்துகளுக்குப் பயப்படாமல் தைரியமாகச் சொல்ல முடியும் ஜிஎஸ்டி நுகர்வோர், வரி அதிகாரிகள் இருதரப்புக்கும் ஏற்றதாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டிக்கு முந்தைய காலத்தில் வரி என்பது அதிகமாக இருந்தது. அப்போது நுகர்வோரின் சேமிப்பு பாதித்தது, அதேசமயம் வரிக் கணக்கு தாக்கல் செய்வோரையும் அது ஊக்கம் இழக்க செய்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் நுகர்வோரின் வரிச் சுமை குறைந்ததோடு, வரி வருவாயும் அதிகரித்ததைப் பார்க்க முடிந்தது” என்று பதிவிட்டுள்ளார். மேலும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகள் 84 சதவீதம் உயர்ந்துள்ளது என்பதே இதற்கு ஆதாரம் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு தேவையான மாற்றங்களைச் செயல்படுத்தினோம். தற்போது ஒரே ஒரு பதிவு முறைதான், அது ஆன்லைன் மூலமாகவும் செயல்படுத்தப்படும் வகையில் உள்ளது. வர்த்தகம், தொழில் ரீதியான பிரச்சினைகளும் பரிசீலிக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுவருகிறது.

ஜிஎஸ்டியில் முந்தைய வரி நடைமுறையில் இருந்த 17 விதமான விதிகளை ஒருங்கிணைத்து ஒரே வரியாக உருவாக்கப்பட்டது. ஜிஎஸ்டிக்கு முன்பு வாட் 14.5%, கலால்வரி 12.5%, சிஎஸ்டி, வரிக்கு வரி என மொத்தமாக நுகர்வோர் தலையில் 31 சதவீத வரிச் சுமை இருந்தது. இன்று ஒரே வரி, ஆன்லைன் வரிக் கணக்குத் தாக்கல், நுழைவு வரி ஏதுமில்லை, நீண்ட வரிசைகளில் டிரக்குகள் காத்துக்கொண்டிருக்கவில்லை, மாநிலங்களுக்கிடையிலான சரக்குப் போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு எந்தத் தடைகளும் இல்லை. வரி வருவாய் உயரும்பட்சத்தில் விரைவில் ஜிஎஸ்டியில் இரண்டு வரி வரம்புகள் மட்டுமே இருக்கும் வகையிலான மாற்றம் வரும் என்று அவர் குறிப்பிட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close