[X] Close

ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கு அரசு தயாராக வேண்டும்: இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 01 Jul, 2019 07:45 am
  • அ+ அ-

நாட்டின் மிக முக்கிய சீர்திருத்தமாகப் பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், புதிய சீர்திருத்தங்களுக்கு அரசு தயாராக வேண்டும் என்று இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் கூறுகையில் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இப்போது நாம் அதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்றார். ஒரே நாடு ஒரே வரி திட்டம் என்ற நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட்டதன் பலனை அனைவரும் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஜிஎஸ்டி 2.0வுக்கு அரசு தயாராக வேண்டும். அதாவது மின்சாரம், எரிபொருள், ஆல்கஹால் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றையும் ஜிஎஸ்டி திட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று தொழில்துறையினர் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில் பலரும் எதிர்த்தனர். மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு என்பதில் ஆரம்பித்து, சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டது வரை எனப் பல சிக்கல்கள் இருந்தன. ஆனால், ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி ஆலோசித்து ஜிஎஸ்டி சார்ந்த பிரச்சினைகளைப் பெரும்பாலும் நிவர்த்தி செய்யப்பட்டது. தற்போது அதன் பலன் தொழில்துறையில் தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும், ஜிஎஸ்டி இன்னும் பலருக்கு சிரமத்தைத் தருகிறது. எனவே, இனி நாம் ஜிஎஸ்டியின் அடிப்படை நோக்கமான மறைமுக வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும் என்று ஃபிக்கி அமைப்பின் தலைவர் சந்திப் சோமனி தெரிவித்தார்.

மேலும் அவர், ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்தனி வரித் துறை இருப்பதால் அது வரி செலுத்துபவர்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை ஒரே அமைப்பின்கீழ் கொண்டுவருவது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.

எரிவாயுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி

முதல்கட்டமாக இயற்கை எரிவாயுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்களையும் ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டுவர வேண்டும். அதுவரை கலால் வரி மற்றும் வாட் வரிகளில் பொருத்தமான திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

புதிய சீர்திருத்தங்கள்

இரண்டு ஆண்டு நிறைவை ஒட்டி இன்று நிதி அமைச்சகம் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மறைமுக வரி முறைகள் சார்ந்து பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப் படுகிறது. ஜிஎஸ்டி வரம்பு நிர்ணயம், எம்எஸ்எம்இ துறைக்கான ஜிஎஸ்டி மற்றும் வரிக் கணக்குத் தாக்கல் உள்ளிட்டவற்றில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தலில் பங்கு வகித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்க உள்ளதாக நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close