[X] Close

ட்ரம்ப் – ஜின்பிங் சந்திப்புக்குப் பிறகு முடிவு; அமெரிக்கா - சீனா மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை: கூடுதல் வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தம்


  • kamadenu
  • Posted: 30 Jun, 2019 07:35 am
  • அ+ அ-

அமெரிக்காவும், சீனாவும் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளன. இதனால் சீன பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த புதிய வரி விதிப்புகள் இப்போதைக்கு அமலுக்கு வராது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஜின்ஹுவா தெரிவித்துள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஜப்பானின் ஒஸாகா நகரில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள இரு நாடுகளின் தலைவர்களும் மாநாட்டுக்கு முன்பாக சந்தித்து பேசினர். இருவரது சந்திப்பும் சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்பட்டது. இரு நாடுகளிடையே நிலவிய வர்த்தகப் போர் காரணமாக பல நாடுகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாயின. சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இரு நாடுகளிடையிலான வர்த்தகப் போர் நிலவியது. இதனால் இது எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் இருந்தது. இந்நிலையில் இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து இப்பிரச்சினைக்கு தற்காலிக தீர்வை எட்டியுள்ளனர். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஜின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. சீன அதிபருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த சந்திப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இரு நாடுகளிடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என்றார்.

இதுகுறித்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், 48 ஆண்டுகளுக்கு முன்பு சீன வீரர்களும் அமெரிக்க வீரர்களும் டேபிள் டென்னிஸில் மோதி, பிங்-பாங் உறவை ஏற்படுத்தினர். அந்த இடத்துக்கு அருகிலேயே இப்போது அமெரிக்க அதிபருடன் பேச்சு நடத்தியுள்ளேன். இது இரு நாடுகளிடையிலான சுமுகமான வெளியுறவு நீடிக்க வழிவகுக்கும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளும் மோதிக் கொள்வதால் ஏற்படும் இழப்புகளுக்குப் பதிலாக, கூட்டு சேர்வதன் மூலம் பரஸ்பரம் பயனடையலாம் என்று அமெரிக்க அதிபரிடம் கூறியதாக ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்கு முன்பு சமீபத்தில் அமெரிக்க அதிபருடன் தொலைபேசியில் உரையாடினேன், கடிதம் மூலமாகவும் கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். தற்போது நேரில் இருவரும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். இது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளும் பரஸ்பரம் அதிக வரி விதிப்புகளை விதித்தன. இதனால் ஏறக்குறைய 36,000 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலையும் உருவானது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close