[X] Close

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு சரிவு: 20 ஆண்டுகளில் 2-ம் முறையாக குறைந்தது


20-2

  • kamadenu
  • Posted: 28 Jun, 2019 10:05 am
  • அ+ அ-

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்து வரும் முதலீடு 2018-ம் ஆண்டில் 6 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 2-ம் முறையாக இதுபோன்ற சரிவு ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் நிதி சார்ந்த சொத்துகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து கருதப்பட்டு வந்தது. இருப்பினும் ஸ்விஸ் வங்கிகளின் மூலம் நிகழும் வரி ஏய்ப்புகள் குறித்து உலக அளவில் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து தனது விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது.

பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் சுவிஸ் வங்கி கணக்குகள் குறித்த விவரங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் தனது சட்டங்களையும் சுவிட்சர்லாந்து கொண்டு வந்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியாவுடனும் சுவிட்சர்லாந்து ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் முழுமையும் கருப்பு பணம் அல்ல என இதுதொடர்பாக மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள மொத்த பணத்தில் இந்தியர்களின் பங்களிப்பு 0.07 சதவீதம் மட்டுமே ஆகும்.

சுவிஸ் தேசிய வங்கியின் (எஸ்என்பி) தரவுகள்படி 2017-ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் தொகை முன்பைவிட 50 சதவீதம் அதிகரித்து ரூ.7,000 கோடியாக இருந்தது.

இந்தநிலையில், சுவிஸ் வங்கிகளில், 2018-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து முதலீடு செய்யப்பட்ட தொகை, 6 சதவீதம் சரிந்துள்ளதாக, அந்நாட்டு வங்கி ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்து, 2018-ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில், 99 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக முதலீடு செய்யப்படும் தொகையை விடவும் இது 4 சதவீதம் சரிந்து உள்ளது.

மேலும், இந்தியாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து, நேரடியாக சுவிஸ் நாட்டு வங்கியிலும், இந்தியாவில் கிளைகளை உடைய மற்ற வங்கிகளிலும், 6,757 கோடி ரூபாய், 2018-ம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் 6 சதவீதம் அளவில் குறைவாகவே முதலீடு வந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து முதலீடு சரிவது தற்போது இரண்டாம் முறை ஆகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close