[X] Close

நிதி மோசடியில் ஈடுபட்ட ஸ்டெர்லிங் பயோடெக்கின் ரூ.9,778 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை


9-778

  • kamadenu
  • Posted: 27 Jun, 2019 08:15 am
  • அ+ அ-

மிகப் பெரும் நிதி மோசடியில் ஈடுபட்ட ஸ்டெர்லிங் பயோடெக் குழுமத்தின் ரூ.9,778 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியிலும் அமலாக்க துறை இறங்கியுள்ளது.

ஸ்டெர்லிங் பயோடெக் குழுமத்தின் முக்கிய இயக்குனர்களான நிதின் சன்டேஸரா, சேத்தன் குமார்சன்டேஸரா, ஹிதேஷ் குமார் படேல் மற்றும் தீப்தி சன்டேஸரா ஆகியோர் போலி ஆவணங்களைக் காட்டி ரூ. 8,100 கோடி அளவில் வங்கிகளில் கடன் பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டனர். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இவர்கள் மீது கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்த நிலையில் அவர்கள் அனைவரும் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர்.

ஹிதேஷ் குமார் படேல் தலைமையில்தான் இந்த அனைத்து மோசடிகளும் நடந்துள்ளதாக தெரியவந்த நிலையில் இன்டர்போல் உதவியுடன் அவர் அல்பேனியா நாட்டில் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடிய அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் சிபிஐயும் அமலாக்கத் துறையும் தீவிரமாக இறங்கியுள்ளது.

வழக்கின் ஆரம்ப கட்டத்தில் இந்த நிதி மோசடியில் தொடர்புடைய டெல்லியைச் சார்ந்த தொழில் அதிபர் காகன் தவான் மற்றும் ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க் ஆகிய இருவரை சிபிஐ கைது செய்தது. ஏழு தனி நபர்கள் மற்றும் அவர்களின் 184 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த 184 நிறுவனங்களில் ஸ்டெர்லிங் பயோடெக், பிஎம்டி மெசின்ஸ், ஸ்டெர்லிங் போர்ட், ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்ஸ் போன்றவை தவிர்த்து மீதுமுள்ள 179 நிறுவனங்கள் போலிநிறுவனங்கள் ஆகும்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களைத் தொடங்கி, அந்த நிறுவனங்களின் போலி ஆவணங்கள் மூலம் பலகோடி அளவில் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்க துறை மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.

போலியாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து ஆந்திரா வங்கி, எஸ்பிஐ, அலகாபாத் வங்கி, பேங்க ஆஃப் இந்தியா என பல்வேறு வங்கிகளில் ரூ.5,000 கோடிக்கும் மேல் கடன் பெற்று இருக்கிறார்கள். தற்போது அவை அனைத்தும் அந்த வங்களில் வாரா கடன்களாக மாறிஉள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு சன்டேஸரா சகோதர்களின் 4000 ஏக்கர் அளவிலான நிலங்கள், 6.67 கோடி மதிப்பிலான பங்குகள், சொகுசு கார்கள், 200 வங்கிக் கணக்குகள் என ரூ.4,700 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது.

வெளிநாடுகளில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் பல கோடி அளவிலான சொத்துகள் இவர்களின் குழுமத்தின் பெயரில் இருப்பதாக விசாரனையில் தெரிய வந்துள்ளது. இதுவரை, வட்டியோடு சேர்த்து இவர்கள் மோசடி செய்த தொகை ரூ.8,100 கோடி என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close