[X] Close

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா


  • kamadenu
  • Posted: 25 Jun, 2019 09:30 am
  • அ+ அ-

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது பதவிக்காலம் முடிய இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் சொந்த காரணங்களுக்காகப் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு வீரல் ஆச்சார்யா தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததாகவும், தவிர்க்க முடியாத சில சொந்த காரணங்கள் காரணமாக தன்னால் ஜூலை 23-ம் தேதிக்கு மேல் பதவியில் தொடர முடியாது என்று குறிப்பிட்டிருந்ததாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது பதவி விலகல் காரணமாக உரிய நபர் நியமனம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பணியாளர் நியமன குழு வீரல் ஆச்சார்யா நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதே குழுதான் இவரது ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 7 மாதங்களில் ரிசர்வ் வங்கியிலிருந்து வெளியேறும் இரண்டாவது நபர் வீரல் ஆச்சார்யா என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பரில் ரிசர்வ் வங்கி கவர்னராயிருந்த உர்ஜித் படேல் தனது பதவிக் காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில் ராஜினாமா செய்தார்.

2017-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக வீரல் ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு துணை கவர்னராயிருந்த உர்ஜித் படேல், கவர்னராக பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து அவரது இடத்துக்கு வீரல் ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.

தற்போது ரிசர்வ் வங்கியில் என்.எஸ். விஸ்வநாதன், பி.பி. கனுங்கோ, எம்.கே. ஜெயின் உள்ளிட்ட 3 துணை கவர்னர்கள் மட்டுமே உள்ளனர்.

நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருந்தவர் வீரல் ஆச்சார்யா. இவர் துணை கவர்னர் பதவிக்கு மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.

அரசுக்கும், ரிசர்வ் வங்கி தலைமைக்கும் இடையே ஏற்பட்ட உரசலே இவரது ராஜினாமாவுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாடு, உபரி நிதியை அரசுக்கு அளிப்பது உள்ளிட்ட விஷயங்களில் இவரது கருத்துக்கும் அரசின் எதிர்பார்ப்புக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவியது. மேலும் பொதுத்துறை வங்கிகளில் 11 வங்கிகளில் நிதி சீரமைப்பு நடவடிக்கை எடுப்பது தொடர்பான பிரச்சினையிலும் மோதல் போக்கே நிலவியது.

இதன் காரணமாகவே இவர் பதவி விலகியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீரல் ஆச்சார்யாவின் திடீர் ராஜினாமா, அதுவும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிகழ்ந்திருப்பது நிதி அமைச்சக வட்டாரங்களில் மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close