[X] Close

எலெக்ட்ரிக் வாகன மாற்றம் ஆதார் போல எளிதானது அல்ல: டிவிஎஸ், பஜாஜ் நிறுவனங்கள் கருத்து


  • kamadenu
  • Posted: 25 Jun, 2019 09:34 am
  • அ+ அ-

இருசக்கர வாகனங்கள் 100 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றம் அடைவது என்பது ஆதார் பிரிண்ட் செய்வது போல எளிதான விஷயம் அல்ல என்று டிவிஎஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கான ஆலோசனைகளை வழங்கும் நிதி ஆயோக் 2023-ல் மூன்று சக்கர வாகனங்களும், 2025-ல் இரு சக்கர வாகனங்களும் தற்போதுள்ள கன்வென்ஷனல் முறையிலிருந்து எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றம் அடைவதற்கான பரிந்துரையை அரசுக்கு வழங்கியுள்ளது.

ஆனால், நிதி ஆயோக்கின் இந்தப் பரிந்துரை எந்தவித ஆய்வும் நடத்தப்படாமல் வழங்கப்பட்டிருப்பதாக டிவிஎஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் விமர்சித்துள்ளன. கடந்த வாரம் நிதி ஆயோக் வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் 2025-க்குள் எலெக்ட்ரிக் வாகன மாற்றம் இலக்கை அடைய என்னென்ன திட்டங்கள் வகுக்கலாம் என்பது குறித்து ஆலோசனைகளைக் கேட்டிருந்தது.

இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் கூறுகையில், “எலெக்ட்ரிக் வாகன மாற்றம் என்பது ஆதார் அட்டை பிரின்ட் செய்வது போலவோ, சாஃப்ட்வேரை மாற்றுவதுபோலவோ அல்ல. தற்போது விநியோக சங்கிலியை முழுவதுமாகப் புதிய விநியோக சங்கிலியாக மாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், சந்தையில் தற்போது 2 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளதாகவும், இந்தத் துறையில் 10 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள், விற்பனை 15 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், நடைமுறை சிக்கல்களை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் கூறுகையில், “100 சதவீத மாற்றம் என்பது முற்றிலும் சாத்தியமற்றது. பிஎஸ் 6 தர நிர்ணயம் வரும் ஆண்டில் நடைமுறைக்கு வர உள்ளது. அதற்குள் எலெக்ட்ரிக் வாகன மாற்றம். இவ்வளவு சீக்கிரத்தில் இது நடந்துவிடக்கூடியதா என்பதை யோசிக்க வேண்டும். எலெக்ட்ரிக் வாகன மாற்றம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நான்கு சக்கர வாகனங்களை விட்டுவிட்டு மூன்று சக்கர, இருசக்கர வாகனங்களை மட்டும் 100 சதவீத எலெக்ட்ரிக் மாற்றத்துக்கு உட்படுத்துவதால் மாசுபாட்டைக் குறைத்துவிட முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close