[X] Close

ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு


  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 08:48 am
  • அ+ அ-

ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியாக இருப்பதாக ஈரான் மீதுஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டிவருகிறார். இதனால் ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார். தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளையும் விதித்தார். ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியது.

கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. இப்படி தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்துவந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் கோபமடைந்த ட்ரம்ப், ஈரான் மீது வான் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற்றார். ஈரானும், ‘ஒரு குண்டு ஈரான் பக்கம் வந்தாலும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்கள் பற்றி எரியும்’ என்று எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் நேற்று அதிபர் ட்ரம்ப், திங்கள் கிழமையான இன்று ஈரான் மீது பல்வேறு புதிய பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஈரான் தொடர்ந்து தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போர் தொடுக்க தயங்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் நிலையற்றத் தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு நெருக்கடிகளை சர்வதேச சந்தைகள் சந்திக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

தங்கம் விலை உயர்வு, பங்குச் சந்தைகள் சரிவு, பொருளாதார மந்தநிலை, முதலீடுகள் குறைவது போன்ற விளைவுகள் தீவிரமாகும் என்று தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறது. தங்கம் விலை உயர்வு பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைவதன் அறிகுறி என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close