[X] Close

விரைவில் புதிய தொழில் கொள்கை


  • kamadenu
  • Posted: 21 Jun, 2019 09:26 am
  • அ+ அ-

மத்திய அரசு விரைவில் புதிய தொழில் கொள்கையை வெளியிடும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

புதிய தொழில்களை உருவாக்குவதன் மூலம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் புதிய தொழில் கொள்கை இருக்கும்.

ஏற்கெனவே உள்ள 1991-ம் வருடத்திய தொழில் கொள்கைக்கு மாற்றாக புதிய தொழில் கொள்கை இருக்கும். இதற்கு முன்னர் 1956-ம் ஆண்டு தொழில் கொள்கை வெளியிடப்பட்டது. தற்போது வெளிவர உள்ள புதிய தொழில் கொள்கை மூன்றாவதாக இருக்கும். வளரும் தொழில்களை ஊக்குவிக்கும் வகையிலும், ஏற்கெனவே உள்ள தொழில்களை நவீனமயமாக்கும் வகையிலும் இருக்கும். தொழில்கள் தொடங்குவதில் உள்ள முட்டுக் கட்டைகளை நீக்கவும், நவீன தொழில்நுட்பமான ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு மாறும் வகையிலும் புதிய தொழில் கொள்கை இருக்கும்.

தொழில், வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மேம்பாடு மற்றும் உள் வர்த்தக துறை (டிபிஐஐடி) 2017-ம் ஆண்டு புதிய தொழில் கொள்கைக்கான வரைவு அறிக்கையை சுற்றுக்கு விட்டது. அடுத்த 20 ஆண்டுகளில் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. மேலும் வெளிநாட்டு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அந்நிய முதலீட்டை ஆண்டுக்கு 10,000 கோடி டாலர் வரை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த வரைவு அறிக்கை அமைச்சரவை சுற்றுக்கு அனுப்பப்பட்டது. ஸ்டார்ட் அப்-களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, புதிய தொழில் முனைவோரை அதிக அளவில் உருவாக்கி, பிற நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ நடவடிக்கை எடுக்கப்படும். 2024-ம் ஆண்டுக்குள் நாட்டில் 50 ஆயிரம் ஸ்டார்ட் அப்களை உருவாக்குவதே இலக்கு என்று என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார். 2016-ம் ஆண்டு ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதனால் இதுவரை 19,820 ஸ்டார்ட் அப்கள் வர்த்தக அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close