[X] Close

பிரதமரின் கிராமப்புற சாலை திட்டத்தால் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு: உலக வங்கி அறிக்கை தகவல்


  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 08:04 am
  • அ+ அ-

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கிராமப்புற சாலை திட்டங்களால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய அரசின் திட்டமான பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் (பிஎம்ஜிஎஸ்ஒய்) செயல்பாடு குறித்து இமாசலப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உலக வங்கி ஆய்வு நடத்தியது. கிராம சாலைத் திட்டங்களால் போக்குவரத்து எளிமையாகிஉள்ளது. இதனால் கிராமப்பகுதியிலிருந்து நகர்ப்பகுதிகளுக்கான இணைப்பு வசதி பெருகி பொருளாதார வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் விகிதமும் அதிகரித்துள்ளது. வீடுகளில் நிகழும் மகப்பேறு குறைந்துள்ளதோடு, மருத்துவமனைகளில் நவீன மருத்துவ வசதியோடு குழந்தை பெறுவது அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கிராம சாலைத் திட்டம் மூலமாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கி மேற்கொண்ட ஆய்வு அறிக்கை விவரம் கடந்த வாரம் மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது. அதில் மூன்று மாநிலங்களில் செயல்படுத்தப்பட்ட பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் பலன் குறித்து விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 2009-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு வரை திரட்டப்பட்ட தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

6 லட்சம் கி.மீ. சாலை

2000-வது ஆண்டில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதுவரையில் 6 லட்சம் கிலோமீட்டர் அளவுக்கு கிராம சாலைகள் போடப்பட்டுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு ஒரு லிட்டர் டீசல் மீது 75 காசுகளை வரியாக (செஸ்) வசூலிக்கிறது.

கிராம சாலை வசதியால் வேளாண் அல்லாத பிற வேலை வாய்ப்புகளைத் தேடி நகருக்கு வருவதும், வீட்டிலுள்ள பெண்கள் பண்ணை வேலைகளைப் பார்ப்பதும் அதிகரித்துள்ளன. இதனால் பெண்களுக்கு கிராமப்பகுதிகளிலும் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. விவசாயம் அல்லாத பிற வேலை வாய்ப்புகளின் அளவு 12 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. வேளாண் அல்லாத பணிகளுக்கு ஆண்கள் மாறிய நிலையில், விவசாயப் பணிகளில் பெண்கள் கவனம் செலுத்துவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகச் சிறப்பான சாலை வசதிகளால் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வேலைக்காக வருவோர் விகிதம் அதிகரித்துள்ளது. நகர்ப்பகுதியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அதேபோல சிறந்த சாலை வசதி காரணமாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் விகிதமும் அதிகரித்துள்ளது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதமரின் சாலை வசதி திட்டம் இந்தியாவின் கிராமப் பொருளாதாரத்தையே மாற்றியுள்ளது. மேலும் வீட்டு வசதி, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட அனைத்தும் ஏழ்மை ஒழிப்பின் அங்கமாக மேற்கொள்ளப்படுவதாக கிராம மேம்பாட்டுத் துறை செயலர் அமர்ஜீத் சின்ஹா தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close