[X] Close

ஆர்-காம் கடன் ரூ. 57,382 கோடி


57-382

  • kamadenu
  • Posted: 19 Jun, 2019 07:42 am
  • அ+ அ-

அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்) நிறுவனத்துக்குள்ள மொத்த கடன் ரூ. 57,382 கோடியாகும். இதில் புதிதாக தொடங்கப்பட்ட இடைக்கால மறு சீரமைப்பு நிர்வாகிகள் (ஆர்பி) கோரிய தொகை ரூ.49,223 கோடியாகும். நிறுவனத்துக்கு கடன் அளித்த சீன மேம்பாட்டு வங்கி (சிடிபி), இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆப் சீனா மற்றும் எக்ஸிம் பேங்க் ஆப் சீனா ஆகியவற்றுக்கு மொத்தமாக அளிக்க வேண்டிய கடன் தொகை ரூ.15,053 கோடி. இதில் கணக்கு சரி பார்க்க வேண்டிய தொகை ரூ.8,158 கோடி என ஆர்-காம் பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சீன மேம்பாட்டு வங்கிக்கு ரூ.9,863 கோடியும், எக்ஸிம் பேங்க் ஆப் சீனாவுக்கு ரூ.3,356 கோடியும், இண்டஸ்ட்ரியல் பேங்க் ஆப் சீனாவுக்கு ரூ.1,554 கோடியும், இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆப் சீனாவுக்கு (மும்பை கிளை) ரூ.278 கோடியும் தர வேண்டியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது நிறுவன சீரமைப்பு திட்டம் (சிஐஆர்பி) பரிசீலனையில் அதாவது திவால் மசோதா நடைமுறை சட்டத்தின்கீழ் உள்ளது. மும்பையில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) இந்த பணிகளை மேற்கொள்ள பிரதீப் குமார் சேத்தி என்பவரை கடந்த ஆண்டு மே 18-ம் தேதி ஐஆர்பி-ஆக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தர வேண்டிய கடன் பொறுப்புகள் குறித்த விவரங்களை பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ளது. அதில் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ. 4,825 கோடியும், எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.4,758 கோடியும், பாங்க் ஆப் பரோடாவுக்கு ரூ.2,531 கோடியும், மாடிசன் பசிபிக் டிரஸ்ட் நிறுவனத்துக்கு ரூ.2,351 கோடியும் தர வேண்டியுள்ளதாக ஐஆர்பி குறிப்பிட்டுள்ளது.

இதே போல சிண்டிகேட் வங்கிக்கு ரூ.1,225 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.1,126 கோடி, ஐடிபிஐ வங்கிக்கு ரூ.1,410 கோடி, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.1,009 கோடி, பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. 979 கோடி கடன் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 53 நிறுவனங்களுக்கு தர வேண்டிய கடன் பொறுப்புகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகையை ரிலையன்ஸ் குழுமம் (ஆர்-ஏடிஏஜி), ரிலையன்ஸ் குளோபல் காம் லிமிடெட் (பெர்முடா), ரிலையன்ஸ் ஹெச்ஆர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் கடனாக பெறப்பட்டவை. இவை அளிக்க வேண்டிய ரூ. 7,000 கோடி கடன் தொகைக்கு ஐஆர்பி ஒப்புதல் அளிக்கவில்லை.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ.7,767 கோடியை நஷ்டமாக சந்தித்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் சந்தித்த நஷ்டம் ரூ.19,776 கோடியாகும்.

கடந்த மே மாதம் கடன் வழங்கிய நிறுவனங்களில் 40 நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கின. இதில் எஸ்பிஐ, சீனா டெவலப்மென்ட் பேங்க், இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆப் சீனா ஆகியன உள்ளன. இவை ஒன்றிணைந்து திவால் நடைமுறை மசோதாவை மேற்கொள்ள பரிந்துரைத்தன.

இதில் கடன் வழங்கிய நிறுவனங்கள் (சிஓசி) தங்களுக்கு சேர வேண்டிய தொகை ரூ. 67 ஆயிரம் கோடி என்பதை ஐஆர்பி ஒப்புக் கொண்டது.

அனில் இனி உலகப் பணக்காரர் இல்லை

கடந்த 2008 ஆண்டில் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் ஆறா வது இடத்தில் இருந்த அனில் அம் பானி தற்போது சொத்து மதிப்பில் மிகப் பெரும் சரிவை சந்தித்துள்ளார். ரூ. 29 ஆயிரம் கோடியாக (42 பில்லி யன் டாலர்) இருந்த அவருடைய சொத்து மதிப்பு தற்போது ரூ.3,600 கோடியாக (0.5 பில்லியன் டாலர்) சரிந்துள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன் ரூ.8,000 கோடியாக இருந்த அவருடைய நிறுவனங்களின் சந்தை மதிப்பு தற்போது ரூ.6,196 கோடியாக குறைந்துள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து அனில் அம்பானியின் நிறுவனங்கள் அதிக அளவில் கடன் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதன் கடன் மதிப்பு 1.7 லட்சம் கோடிக்கும் மேலாக இருந்தது. இந்நிலையில் கடந்த 14 மாதங்களில் ரூ.35,000 கோடி அளவில் கடன்களை திருப்பி செலுத்தியுள்ளதாக அனில் அம்பானி தகவல் தெரிவித்து இருந்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close