[X] Close

வரி ஏய்ப்பாளர்கள் மீது கெடுபிடி அதிகரிப்பு: இனி அபராதம் செலுத்தி வழக்குகளிலிருந்து தப்ப முடியாது


  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 08:30 am
  • அ+ அ-

வரி ஏய்ப்பாளர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை அரசு தீவிரமாக்க திட்டமிட்டுள்ளது. இதனால் இனி அபராதம் செலுத்துவதால் மட்டுமே வழக்குகளிலிருந்து தப்பிவிட முடியாது என்ற நிலை உருவாக உள்ளது.

வரி ஏய்ப்பு தொடர்பாக அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகள் வரி ஏய்ப்பின் தன்மைகளின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக கருப்பப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பவர்கள், கூட்டு அபராதம் செலுத்துவதன் மூலம் சட்டத்திலிருந்து இனி தப்பித்துவிட முடியாது. இந்தப் புதிய வரி ஏய்ப்பு விதிமுறைகளை மத்திய நேரடி வரிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நேரடி வரிகள் தொடர்பான குற்றங்கள் மீதான இந்த விதிமுறைகள் ஜூன் 17 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. ஜூன் 17-க்குப் பிறகு பெறப்படும் அனைத்துவிதமான கூட்டு விண்ணப்பங்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். 2014 டிசம்பரில் வெளியிடப்பட்ட விதிமுறைகளுக்கு மாற்றாக இவை நடைமுறைப்படுத்தப்படும்.

துருவா அட்வைசர்ஸ் நிறுவனத்தின் இணை உரிமையாளர் சந்தீப் பல்லா இதுகுறித்து கூறியதாவது, “முந்தைய விதிமுறைகளில் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், சொத்துகள் போன்றவை தொடர்பான குற்றங்களில், குற்றவாளி ஒத்துழைப்பு கொடுத்து, வரிகளை வட்டியோடு செலுத்தினால், கூட்டு அபராத முறை அனுமதிக்கப்பட்டது. ஆனால், கருப்பப் பண தடுப்பு சட்டம் 2015-ன்படி இந்த கூட்டு அபராத முறைக்கு அனுமதி இல்லை.

அதேசமயம் இந்தச் சட்டத்தில் குற்றவாளி செலுத்த வேண்டிய வரியில் 30 சதவீதமும், கடுமையான அபராதத்தையும் செலுத்தினால் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளில் கணக்கில் காட்டாத சொத்துகள், வங்கிக் கணக்குகள் மற்றும் கருப்புப் பண தடுப்பு சட்டம் ஆகிய இரண்டிலுமே கூட்டு அபராத முறைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நிறுவனம் மூலமாக கருப்புப் பண மோசடிகளில் ஈடுபட்டவர்களைத் தப்பிக்க வழிவகை செய்வதாக இருந்த கதவையும் அடைத்துள்ளது.

வரி ஏய்ப்பு, கருப்புப் பண மோசடி, முறைகேடான கணக்குகள், போலி நிறுவனங்களின் கணக்குகள், பினாமி பரிவர்த்தனைகள் என அனைத்துமே தனித்தனி குற்றங்களாகவே பாவிக்கப்பட உள்ளன. இவை அனைத்திலும் கூட்டு அபராத முறை ரத்துசெய்யப்பட்டுள்ளது. 2017 நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில் ஆயிரத்துக்கும் மேலான விசித்திரமான வழக்குகள் கூட்டு வழக்குகளாகப் பதிவாகிஉள்ளன. ஆனால், வருமானவரித் துறையில் பதிவான வழக்குகள் இவற்றை விட இரண்டு மடங்காக இருந்தன. இந்நிலையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளால் வருகிற காலங்களில் வழக்குகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

புதிய விதிமுறைகளின்படி இரண்டு வகைகளாக வழக்குகள் பிரிக்கப்பட்டுள்ளன. டிடிஎஸ் வைப்பு வைக்க தவறுதல் அல்லது வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய தவறுதல் போன்றவை ஒரு வகையாகவும், திட்டமிட்ட வரி ஏய்ப்பு, போதுமான கணக்கு ஆதாரங்களை வழங்காமல் இருத்தல் உள்ளிட்டவை இரண்டாம் வகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகைகளிலும் பதிவாகும் குற்றங்களில் கூட்டு நடவடிக்கையைச் செயல்படுத்த கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் மத்திய நேரடி வரிகள் ஆணையம் வகுத்துள்ளது.

டிடிஎஸ் விஷயத்தில் மூன்று முறை மட்டுமே கூட்டு நடவடிக்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்ட வரி ஏய்ப்புக்கு ஒரு முறை மட்டுமே கூட்டு நடவடிக்கை அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டு அபராதம் பல வழக்குகளில் அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், சில வழக்குகளில் குறைவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ் தொடர்பான வழக்குகளில் கூட்டு அபராதம் மாதத்துக்கு 3 சதவீதமாக இருந்தது 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close