[X] Close

ஜெட் ஏர்வேஸ்-ஸை என்சிஎல்டி-க்கு அனுப்ப முடிவு


  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 08:22 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியில் சிக்கி, விமான சேவையை முற்றிலுமாக நிறுத்திவிட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்துக்கு (என்சிஎல்டி) அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தை ஏற்று நடத்த தகுதி படைத்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஆனால் எந்த ஒரு நிறுவனமும் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஏற்கெனவே ஜெட் ஏர்வேஸில் பங்குகளை வைத்துள்ள எதியாட் நிறுவனமும் இதில் திட்டவட்டமான முடிவை அறிவிக்கவில்லை. மேலும் ஹிந்துஜா குழுமமும் உறுதியான முடிவை தெரிவிக்கவில்லை. இதனால் இதை திவால் நடைமுறைக்கு உட்படுத்த பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிக் குழு முடிவு செய்துள்ளது.

திவால் நடைமுறை தொடர்பான மனுவை என்சிஎல்டி-யின் அடுத்த கட்ட விசாரணை நடைபெற உள்ள ஜூன் 20-ம் தேதி தாக்கல் செய்ய வங்கிக் குழு முடிவு செய்துள்ளது. ஜெட் ஏர்வேஸை வாங்குவது தொடர்பாக எதியாட் மிகக் கடுமையான விதிகளை முன்வைத்ததாகத் தெரிகிறது. அதேபோல ஹிந்துஜா குழுமம் வெளியிட்ட கருத்துகளும் வங்கிக் குழுவுக்கு ஏற்புடையதாக இல்லை. இரு நிறுவனங்களுமே ஜெட் ஏர்வேஸுக்கு உள்ள கடன் சுமையில் 95 சதவீதத்தை வங்கிக் குழு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

மும்பை பங்குச் சந்தையில் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் 16.76% சரிந்து ரூ.68.30 என்ற விலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையில் நிறுவனப் பங்குகள் 18 சதவீதம் சரிந்தன.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியால் தனது விமான சேவையை கடந்த ஏப்ரல் 17-ம் தேதி நிறுத்தியது. இந்நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.8,500 கோடி. இது தவிர நிறுவனத்துக்குள்ள கடன் பொறுப்புகள் ரூ.25 ஆயிரம் கோடி எனத் தெரிகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close