[X] Close

அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி: 29 பொருள்களின் மீது கூடுதல் வரி விதிப்பு: நாளை முதல் அமலுக்கு வருகிறது


29

  • kamadenu
  • Posted: 15 Jun, 2019 08:53 am
  • அ+ அ-

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை இந்தியா நாளை முதல் அமல்படுத்த உள்ளது. பாதாம், வால்நட், பருப்பு வகைகள் உள்ளிட்ட 29 பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை செயல்படுத்துவதில் தொடர்ந்து கால நீட்டிப்பு செய்யப்பட்டுவந்தது. ஆனால், அமெரிக்கா இதற்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை. அதாவது இந்தியப் பொருட்கள் மீதான வரியை நீக்குவது குறித்து எந்த முடிவையும் அமெரிக்கா எடுக்காததால், பதிலடி நடவடிக்கையாக ஜூன் 16 முதல் இந்தக் கூடுதல் வரி விதிப்பைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இத்தகைய கூடுதல் வரி விதிப்பு மூலம் மத்திய அரசுக்கு 21 கோடி டாலர் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்ததற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை செயல்படுத்துவதில் ஓராண்டு தாமதம் ஏற்பட்டது.

வரி விதிப்பு தொடர்பான உத்தரவை அமெரிக்க தரப்புக்கு தெரிவித்துவிட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்தது.

உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியம் மீது 10 சதவீதமும் வரி விதிப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா அறிவித்தது. இந்தியாவிலிருந்து அதிக அளவில் உருக்கு, அலுமினியம் ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த வரி விதிப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அமெரிக்கா விதித்த கூடுதல் வரியால் 24 கோடி டாலர் அளவுக்கு கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் வரி விதிப்பை இந்தியா செயல்படுத்தாமலிருந்தது. மேலும் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த பொதுப் பிரிவு சலுகையையும் அமெரிக்கா கடந்த ஜூன் 5-ம் தேதி ரத்து செய்தது. இதனால் இந்தியாவுக்கு 550 கோடி டாலர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 29 பொருட்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு வரி விதிக்க இந்தியா முடிவு செய்து அதை செயல்படுத்த உள்ளது. ஆப்பிள், பியர்ஸ், தட்டையான உருக்கில் செய்யப்பட்ட பொருள்கள், டியூப் மற்றும் பைப் ஃபிட்டிங், ஸ்க்ரூ, போல்ட் மற்றும் ரிவிட் ஆகியவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 150 கோடி டாலர் மதிப்புக்கு அலுமினியம் மற்றும் உருக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

2017-18-ம் நிதி ஆண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான பொருட்களின் மொத்த மதிப்பு 4,700 கோடி டாலராகும். இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு 2,600 கோடி டாலராகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close