[X] Close

சந்தா கோச்சாருக்கு அமலாக்கத் துறை சம்மன்


  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 11:37 am
  • அ+ அ-

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாருக்கு அமலாக்கத் துறை (இடி) சம்மன் அனுப்பியுள்ளது. ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் ஆகியன இணைந்து அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஜூன் 10-ம் தேதி ஆஜராகுமாறு முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தான் ஜூன் 13-ம் தேதி ஆஜராவதாக அவர் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சாரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி அவர்களது பதிலை பதிவு செய்தது.

இதனிடையே கடந்த வாரத்தில் சிபிஐ அதிகாரிகள் ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. சந்தா கோச்சார் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு மாறுபட்ட கருத்துகளை தெரிவித்திருந்தவர்களிடம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் சந்தா கோச்சாரின் மைத்துனர் ராஜீவ் கோச்சாரும் பல முறை அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட அவிஸ்டா அட்வைஸரி எனும் நிறுவனத்தை ராஜீவ் கோச்சார் நடத்தி வருகிறார். வீடியோகான் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெறுவதற்கு இவரது நிறுவனம் எந்த வகையில் உதவியது என்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

கடந்த மார்ச் 1-ம் தேதி சந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆகியோர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர்.

சந்தா கோச்சாரின் வீடு மற்றும் மும்பை, அவுரங்காபாதில் உள்ள வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அன்னியச் செலாவணி விதி மீறல் தொடர்பாக சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் ஐசிஐசிஐ வங்கி வேணுகோபால் தூத் நிறுவனமான வீடியோகானுக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) தாக்கல் செய்துள்ளது. வீடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் ஆகியன மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சுப்ரீம் ஏஜென்சி மீதும், தீபக் கோச்சாருக்குச் சொந்தமான நுபுபவர் ரீனியூவபில்ஸ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close