[X] Close

வரி விதிப்பு, வரி ஏய்ப்பை தடுப்பதில் இந்தியா தீவிரம்: ஜி-20 உச்சி மாநாட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு


20

  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 11:24 am
  • அ+ அ-

நாடுகளிடையிலான இரட்டை வரி விதிப்பை தடுக்கவும் நாட்டில் வரி ஏய்ப்பை தடுக்கவும் இந்தியா தீவிர கவனம் செலுத்தி அதற்குரிய முயற்சிகளை எடுத்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஜப்பானில் உள்ள ஃபுகோகா நகரில் தொடங்கிய ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் அவர் இக்கருத்துகளை வலியுறுத்திப் பேசினார். சர்வதேச அளவில் வரி விதிப்பு, ஸ்திரமான மற்றும் நவீன சர்வதேச வரி விதிப்பு முறைகள் குறித்த கருத்தரங்கில் பேசிய அவர், வரி விதிப்பு மற்றும் வரி ஏய்ப்பைத் தடுக்க இந்தியா எடுத்து வரும் முயற்சிகளை பட்டியலிட்டார். இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் அந்தந்த நாடுகளின் மத்திய வங்கி கவர்னர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் விஷயங்கள் இதைத் தொடர்ந்து ஒசாகா நகரில் இம்மாதம் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்படும்.

மாநாட்டில் பேசிய நிர்மலா சீதாராமன், தற்போது பெரும்பாலான நாடுகள் தற்காப்புக் கொள்கையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. இது சர்வதேச அளவிலான வர்த்தகத்தைப் பெருமளவு பாதிப்பதாக அமைந்துள்ளது. இதனால் வளர்ச்சி விகிதமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவிலான வரி விதிப்பு மற்றும் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு ஆகியவற்றுக்கேற்ப வரிக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்து இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

1961-ம் ஆண்டு நாடுகளிடையே வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) உருவாக்கப்பட்டது. இதில் இந்தியா உள்பட 36 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பை வலுப்படுத்தும் வகையில் வரிவிதிப்புக் கொள்கைகள் இருக்க வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த அமைப்பின் மூலமாக எல்லை தாண்டிய வரி ஏய்ப்பை நிறுவனங்கள் மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் சில நாடுகளில் நிலவும் வரி விதிகளுக்கேற்ப வரி ஏய்ப்பு மேற்கொள்வதை தடுக்கும் வகையில் வரிக் கொள்கைகள் இருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்குப் பிறகு 90 நாடுகள் வரி சார்ந்த கணக்கு வழக்குகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் மயமாகிவரும் சூழலில் ஜி-20 நாடுகள் மற்றும் ஒஇசிடி நாடுகள் வர்த்தக விவரங்களை எவ்விதம் பகிர்ந்து கொள்ளப் போகின்றன என்பது பெரும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஜப்பான் துணை பிரதமரும், நிதி அமைச்சருமான டாரோ அஸோ, குறைவான வரி செலுத்தும் சில டிஜிட்டல் நிறுவனங்கள் மீது சில நாடுகள் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்துள்ளன. இது தற்காலிக ஏற்பாடு மட்டுமே. பொதுவாக இந்த விஷயங்களை ஒருங்கிணைந்து சமாளிப்பதுதான் தீர்வாக இருக்கும். தனித்தனியாக எதிர்கொள்வது பலனளிக்காது என்று குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரிட்டன் நிதி அமைச்சர் பிலிப் ஹமாண்டுடனும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாக ட்விட்டர் பதிவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close