[X] Close

ஜி-20 நிதியமைச்சர்கள் உச்சி மாநாடு: நிர்மலா சீதாராமன் பங்கேற்பு


20

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 09:55 am
  • அ+ அ-

ஜப்பானில் நடக்க இருக்கும் இந்த ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாட்டின் நிதியமைச்சர்கள் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க இருக்கிறார். இந்த சந்திப்பு ஜூன் 8-ம் தேதி ஆரம்பமாகிறது. நிர்மலா சீதாராமனுடன் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸூம் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

ஜூன் 28 மற்றும் 29-ம் தேதிகளில் ஜி -20 உச்சி மாநாடு ஜப்பானில் உள்ள ஒசாகா என்னும் இடத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஜி-20 நாடுகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதற்கு முன்னதாக ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் சந்திப்பு நடக்க உள்ளது. இந்தச் சந்திப்பில் உலக நாடுகளுக்கிடையிலான வர்த்தகப் போக்கு குறித்து விவாதிக்க உள்ளனர். குறிப்பாக நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் பரிமாற்றத்தில் சில நாடுகள் விதிக்கும் தடை, அதனால் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் டிஜிட்டல் பொருளாதாரமயத்தில் சர்வதேச வரிவிதிப்பு, உலகப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் ஆபத்துகள், சீரற்ற வளர்ச்சி விகிதம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.

சர்வதேச செலாவணி நிதியத்தின் கணிப்பின்படி இந்த ஆண்டு சர்வதேச வளர்ச்சி 3.3 சதவீதமாகக் குறையும் என்ற தகவல் பிரச்சினையின் தீவிரத்தைக் குறிக்கிறது. இது சென்ற ஆண்டு 3.6 சதவீதமாக இருந்தது. எனவே இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படும் விஷயங்கள், ஜி-20 மாநாட்டில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஜி-20 மாநாட்டில் ஐரோப்பிய யூனியன் தவிர்த்து 19 நாடுகள் பங்கேற்கும். 1999-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படும். நிலையான பொருளாதார வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் முன்வைக்கப்படும். இந்தியா உட்பட அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, சவூதி அரேபியா, பிரேசில், பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close