[X] Close

2019-20 நிதி ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி 7.5%: உலக வங்கி கணிப்பு


2019-20-7-5

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 09:53 am
  • அ+ அ-

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடுத்த மூன்றாண்டுகளுக்கு 7.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடுகளும் நுகர்வும் அதிகரிப்பதன் விளைவாக இந்த வளர்ச்சி சாத்தியமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் முன்னிலையில் இந்தியா இருப்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது உலக வங்கி. முடிந்த நிதி ஆண்டில் வளர்ச்சி 7.2 சதவீதமாக உலக வங்கி கணித்திருந்த நிலையில், 7 சதவீதத்துக்கும் குறைவாக வளர்ச்சி இருந்தது. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் வளர்ச்சி குறைவுக்கு காரணமான காரணிகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசே மீண்டும் பொறுப்பேற்றிருப்பதால் நிலையான அரசு பல்வேறு சாத்தியக்கூறுகளை உருவாக்கும். மேலும் பல்வேறு சீர்திருத்தங்கள், கொள்கைகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், வளரும் நாடுகளில் முன்னணியில் உள்ள சீனாவின் வளர்ச்சி 2018-ல் 6.6 சதவீதமாக இருந்த நிலையில் 2019-ல் இது 6.2 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.

இது 2020-ம் ஆண்டில் 6.1 சதவீதமாகவும் 2021-ல் 6 சதவீதமாகவும் குறையும் என உலக வங்கி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா தொடர்ந்து வேகமாக வளரும் நாடு என்ற நிலையில் வலுவாக முன்னேறிக்கொண்டிருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 2021-ல் சீனாவின் வளர்ச்சி 6 சதவீதமாக உள்ள நிலையில் இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என ஏற்கெனவே கூறியிருந்தது. தற்போது அதனை மிகவும் திட்டவட்டமாக உறுதி செய்துள்ளது. நிதிக் கொள்கை முடிவுகள் சந்தைக்குச் சாதகமாக எடுக்கப்படுவதாலும், கடன் வளர்ச்சி அதிகரித்து வருவதாலும் தனியார் நுகர்வும், முதலீடும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.

அதேசமயம் பணவீக்கமும் ரிசர்வ் வங்கியின் இலக்குக்குக் குறைவாக உள்ளது. துறைகளைப் பொருத்தவரை ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருப்பதால் வேளாண் துறை சில நெருக்கடிகளைச் சந்தித்தாலும், தொழில் துறை, சேவைத் துறை ஆகியவை கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. தற்போது சர்வதேச அளவில் மந்த நிலை இருப்பதால் இந்தியச் சந்தையிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், வரும் ஆண்டுகளில் தற்போதுள்ள சிக்கல்கள் விலகி ஆரோக்கியமான போக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close