[X] Close

நடப்பாண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி


5

  • kamadenu
  • Posted: 04 Jun, 2019 09:18 am
  • அ+ அ-

தொலைத் தொடர்புத் துறையில் 5ஜி உள்ளிட்ட அலைக்கற்றைகளின் ஏலம் நடப்பு ஆண்டுக்குள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது இதைத் தெரிவித்தார். தொலைத் தொடர்பு துறையில் அடுத்தகட்ட தொழில்நுட்ப பாய்ச்சலாக 5ஜி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கான உட்கட்டமைப்புகள் இன்னமும் மேம்படுத்தப்படவில்லை என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கவலை தெரிவித்து வந்தன. இதன் காரணமாக அலைக்கற்றை ஏலத்தை இப்போது நடத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டன.

ஆனால், அலைக்கற்றைகளின் ஏலம் இந்த நடப்பாண்டிலேயே நடத்தப்படும் என ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மேலும் தொலைத் தொடர்புத் துறையில் உள்ள பிரச்சினைகளைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னுரிமை அடிப்படையில் எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அவற்றில் அவர் குறிப்பிட்ட சிலவற்றில் 5ஜி தொழில்நுட்ப சோதனைகள் அடுத்த 100 நாட்களில் நடத்துவது, 5 லட்சம் வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை வேகமாகக் கண்காணிப்பது, தொலைத் தொடர்பு துறை சார்ந்த உற்பத்தியை மேம்படுத்துவது உள்ளிட்டவை அடங்கும். மேலும் பொதுத் துறை நிறுவனங்களான எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் நிறுவனங்களின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close