[X] Close

இந்தியாவின் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து ரத்து: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை


  • kamadenu
  • Posted: 02 Jun, 2019 08:42 am
  • அ+ அ-

இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா இதுவரை இந்தியாவுக்கு அளித்துவந்த இந்த வர்த்தக முன்னுரிமையின் கீழ் வாகன உதிரி பாகங்கள், ஜவுளிப் பொருட்கள் என 2,000 தயாரிப்புகளை இந்தியா அமெரிக்காவுக்கு வரி ஏதும் இல்லாமல் ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது இந்தியாவின் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவில் வர்த்தகம் செய்வதற்கு சில நாடுகளுக்கு முன்னுரிமைகளும் சலுகைகளும் அளிக்கப்படும். அதன்படி இந்த திட்டத்தின்கீழ் வரும் நாடுகள் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரி ஏதும் செலுத்தாமல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளலாம்.

கடந்த மார்ச் மாதம், இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுவந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை விலக்க இருப்பதாக ட்ரம்ப் அறிவித்து இருந்தார். இந்நிலையில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கவிருந்ததால் பொறுத்திருந்து தனது முடிவை உறுதி செய்திருக்கிறார்.

வர்த்தக முன்னுரிமை ஒப்பந்தத்தில் சில விதிமுறைகள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தின்கீழ் வரும் நாடுகள் அந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். உலகளாவிய தொழிலாளர் விதிகளை கடைபிடித்தல், அறிவுசார் உடைமைகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், முறையான நியாயமான வர்த்தக உறவைப் பேணுதல் போன்றவை அந்த விதிகளில் சில. இந்த விதிளை கடைபிடிக்கும் பட்சத்தில் அந்த நாடுகள் குறிப்பிட்ட தயாரிப்புகளை அமெரிக்காவுக்கு வரி ஏதுமின்றி ஏற்றுமதி செய்து கொள்ளலாம். ஆனால், இந்த விதிகளை இந்தியா பூர்த்தி செய்யவில்லை என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

‘வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா எதிர்பார்த்த அளவில் இந்தியச் சந்தையில் சம அளவிலான வர்த்தக வாய்ப்புகளை இந்தியா வழங்கத் தவறி இருக்கிறது. அதன் காரணமாக வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்குகிறோம்’ என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

ட்ரம்பின் இந்த முடிவு குறித்து வர்த்தக முன்னுரிமை அமைப்புக்கான கூட்டணியின் நிர்வாக இயக்குனர் டான் அந்தோனி கூறியதாவது, “ட்ரம்பின் இந்த முடிவு அமெரிக்க வர்த்தகத்தை பெரும் அளவு பாதிக்கும். அமெரிக்காவிலுள்ள குறு தொழில் நிறுவனங்கள்தான் வர்த்தக முன்னுரிமை அளிக்கப்பட்ட நாடுகளிலிருந்து செய்யப்படும் இறக்குமதிகளால் பெரும் அளவில் பயன்பெற்றுவருகின்றன.அந்த முன்னுரிமை பட்டியலில் இருந்து நாடுகள் நீக்கப்படும்போது பாதிக்கப்படுவது அமெரிக்க நிறுவனங்கள்தான். அவர்கள் இறக்குமதிக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகும். அதன் விளைவாக வேலையின்மை உருவாகும்” என்றார்.

மேலும், “வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இந்தியா தொடர வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும், அமெரிக்க வர்த்தக நிறுவனங்களும் கேட்டுக்கொண்டன. அவற்றிற்கெல்லாம் எதிராகத்தான் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்’ என்றும் தெரிவித்தார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு துரதிஷ்டவசமானது. இந்தியா-அமெரிக்கா இடையிலான சுமுகமான வர்த்தகத்துக்கு தேவையான குறிப்பிடத்தக்க முயற்சிகளை இந்தியா எடுத்துள்ளதாகவும், ஆனால், அவற்றை ஏற்க அமெரிக்கா தயாராக இல்லை என்பதாகவும் இந்திய வர்த்தகத் துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு கணக்கின்படி, உலகளவில் 324.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது. அதில் 51.4 பில்லியன் டாலர் அளவில் இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. அதிலும் அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து திட்டத்தின்கீழ் இந்தியா செய்த ஏற்றுமதியின் மதிப்பு 6.35 பில்லியன் டாலர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close