[X] Close

ஜிஎஸ்டி விதி மீறுபவர்களுக்கு ஜாமீன் இல்லை: நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 01 Jun, 2019 08:39 am
  • அ+ அ-

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிகளை மீறுவோர் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டாம் என்று மாநில உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தெலங்கானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் நிறுத்தி வைத்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தெலங்கானா உயர் நீதிமன்றம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்தவரை கைது செய்யும் சிஜிஎஸ்டி சட்டம் 2017-க்கு தடை விதித்தது. ஆனால் இந்த தடையை மே 27-ம் தேதி தனது உத்தரவு மூலம் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இது தொடர்பான விவாதத்தில் மத்திய அரசு சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிஜிஎஸ்டியை அமல்படுத்தும் அரசு அதிகாரிகள் போலீஸார் அல்ல. இதனால் தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பிறகு கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கூற முடியாது. அதேசமயம் சிஜிஎஸ்டி சட்டத்திலேயே குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் (சிஆர்பிசி) கைது செய்யும் முன்பாக எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. விதிமுறைகளை மீறுவோர் மீது கைது நடவடிக்கையை எடுக்க ஜிஎஸ்டி சட்டத்தில் இடமுள்ளது என்று துஷார் மேத்தா சுட்டிக் காட்டினார். அதேபோல சிஜிஎஸ்டி சட்ட விதியானது சிஆர்பிசி விதிகளிலிருந்து மாறுபட்டது. இதையே நாடாளுமன்ற குழு தனித்தனியாக பிரித்து விதிகளை வகுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மனு மீதான விசாரணை விடுமுறைக் கால நீதிபதிகள் குழுவான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி அனிருத்த போஸ் ஆகியோரடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் உரிய வழிகாட்டுதலை அளிக்க வேண்டியது அவசியமாகிறது. இதன்படி இனி மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றங்கள் ஜிஎஸ்டி விதி மீறுவோர், வரி செலுத்தாதவர்களை அதிகாரிகள் கைது செய்ய முற்படும்போது முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து மாநில நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும் என தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

அவகாசம் வழங்க வேண்டும்

இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த முன்னணி பட்டயவியல் தணிக்கையாளர் டி.ஆர். ராமநாதன் கூறியது: வரி ஏய்ப்பு செய்திருந்ததாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர், தனது தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்வதற்கு அவகாசம் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக கைது நடவடிக்கை என்பது வர்த்தகத் துறையினரை வெகுவாக அச்சமடையச் செய்யும் நடவடிக்கையாகத்தான் இருக்கும். வரி விஷயங்களை தணிக்கை செய்யும்போது, ஒருவர் வரி ஏய்ப்பு செய்கிறார் என்பதை கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு போதிய அவகாசம் கிடைக்கிறது. அதேபோல சம்பந்தப்பட்ட நபர் தனது தரப்பு நியாயத்தை எடுத்து வைக்கவும் அவகாசம் தர வேண்டும். நேரடியாக கைது நடவடிக்கை என்பது மிகவும் அச்சமூட்டும் செயல் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close