[X] Close

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு; மொரீஷியஸை முந்தியது சிங்கப்பூர்


  • kamadenu
  • Posted: 30 May, 2019 08:55 am
  • அ+ அ-

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு செய்வதில் மொரீஷியஸைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக முதலீடு செய்து சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடு எனப்படும் வழியில் அதிக அளவிலான முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசும் அந்நிய நேரடி முதலீடுகளில் குறிப்பிடத்தக்க தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. இதனால் சமீப ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் அதிகரித்துள்ளது.

இதிலும் அதிகமாக இந்தியாவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன் மொரீஷியஸ் முதலிடத்தில் இருந்தது. ஆனால், கடந்த 2018-19 நிதி ஆண்டில் மொரீஷியஸ் வழியாக இந்தியாவுக்குள் செய்யப்பட்ட முதலீட்டைக் காட்டிலும் சிங்கப்பூர் வழியாகச் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளன. மொரீஷியஸ் வழியாகச் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் 8.1 பில்லியன் டாலராக உள்ள நிலையில், சிங்கப்பூர் வழியாகச் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் 16.2 பில்லியன் டாலராக உள்ளது.

ஆனால் பத்து வருடங்களுக்கு முன் சிங்கப்பூர் வழியாக வந்த முதலீட்டைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமான முதலீடுகள் மொரீஷியஸ் வழியாக வந்தன. ஏனெனில் அப்போது வரி புகலிடமாக மொரீஷியஸ் இருந்தது. மொரீஷியஸில் மிகமிகக் குறைவான அளவிலேயே வரி வசூலிக்கப்பட்டது. இதனால், பெரும்பாலானோர் வரி ஏய்ப்பு செய்து கருப்புப் பணத்தை பதுக்குவதோடு அதை மொரீஷியஸ் வழியாக மீண்டும் இந்தியாவுக்குள் வெள்ளையாக்கி கொண்டுவரும் முறைகேடுகளில் ஈடுபட்டனர். 2000லிருந்து இந்தியாவில் செய்யப்பட்ட முதலீடுகளில் 32 சதவீதம் வரை மொரீஷியஸ் வழியாக வந்தவைதான். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் இருப்பவர்கள் கூட மொரீஷியஸ் வழியாக இந்தியாவுக்குள் முதலீடு செய்துவந்தனர்.

இதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவும் மொரீஷியஸும் வரி தொடர்பான விஷயங்களில் மாற்றங்களைச் செயல்படுத்த ஒப்பந்தம் செய்துகொண்டன. இதையடுத்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே வரி நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 2017 ஏப்ரல் முதல் இந்தியப் பங்குப் பரிவரித்தனைக்கு மூலதன ஆதாய வரி விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இதையடுத்து தற்போது மொரீஷியஸ் வழியாக முதலீடு செய்யப்படுவது குறைந்துள்ளது. மொரிஷியஸுக்குப் பதிலாக முதலீட்டாளர்கள் சிங்கப்பூர் வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

வரியைப் பொருத்தவரை இரு நாடுகளுக்கிடையில் சமநிலையான போக்கு நிலவுவதால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இங்கே அணுகுமுறை, நடைமுறைகள் அனைத்தும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கின்றன. மேலும் சிங்கப்பூரில் தலைமையகத்தை அமைத்தால் குறைந்த வரி விகிதம் உள்ளிட்ட வரிச் சலுகைகள், ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன என்கிறார் எர்னஸ்ட் அண்ட் யங் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ராஜிவ் சக்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close