[X] Close

பிரதமரின் உஜ்வாலா திட்டம்: 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க முடிவு


5

  • kamadenu
  • Posted: 29 May, 2019 08:44 am
  • அ+ அ-

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் அடுத்த கட்டமாக 5 கிலோ சிலிண்டர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியில் மீண்டும் ஆட்சியைப்பிடித்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசின் வெற்றியில் உஜ்வாலா திட்ட செயல்பாடு மிக முக்கியமான காரணியாக கருதப்படுகிறது. பெருமளவிலான கிராமப்புற பெண்களின் வாக்குகளைப் பெறஉதவியதற்கு இந்த திட்டமே காரணம் என கருதப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் குடும்பத்துக்கு அளிக்கப்படும் இணைப்புக்கு ரூ.1,600 மானியம் அளிக்கப்படுகிறது. அதன் மூலம் சமையல் அடுப்பு, சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் இதுவரை 7.19 கோடி குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற 100 நாள்களுக்குள் இந்த எண்ணிக்கையை 8 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை (14.2 கிலோ) தோராயமாக ரூ. 712 எனில் அதில் ரூ. 215 மானியம் நேரடியாக பயனீட்டாளர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. இணைப்புகள் அனைத்துமே குடும்பத் தலைவியின் பெயரில் பதிவு செய்யப்படுவதால் மானியமும் குடும்ப உறுப்பினருக்கே அளிக்கப்படுகிறது. ஏழைக் குடும்பத்தினர் ரீஃபில் சிலிண்டரை வாங்க ரூ. 712 செலவிட வேண்டியிருப்பதால், பல சமயங்களில் சிலிண்டர் வாங்காமல் தவிர்த்துவிடுகின்றனர்.

இதனால் சில வீடுகளில் பழைய விறகு அடுப்பு முறையே புழக்கத்துக்கு வந்துவிடுகிறது. இதற்குப் பதிலாக 5 கிலோ சிலிண்டரை ரூ. 260 விலையில் வழங்கும்போது மானியமாக ரூ. 80 கிடைக்கும். வாங்குவதும் எளிது. 3 பெரிய சிலிண்டருக்குப் பதிலாக 5 கிலோ சிலிண்டர்கள் 9-ஐ வழங்குவது சரியாக இருக்கும் என பெட்ரோலிய துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதைக்கருத்தில் கொண்டு அடுத்த கட்டமாக 5 கிலோ சிலிண்டரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது எடை குறைவாக இருப்பதால் கையாள்வதும் எளிதாக உள்ளது. இதன் மூலம் இந்தத்திட்டம் மேலும்பிரபலமடையும் என்று பெட்ரோலிய அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

உஜ்வாலா திட்டம் 2016-ம்ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில்இதற்கான இலக்கு மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னாளில் இதன் தேவை மற்றும் பிரபலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இது விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது இது அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கவசதியாக 5 கிலோ சிலிண்டரையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close