[X] Close

டூட்டி ஃபிரீ ஷாப்களில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கக் கூடாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு


  • kamadenu
  • Posted: 26 May, 2019 08:27 am
  • அ+ அ-

விமான நிலையங்களில் செயல்படும் டூட்டி ஃபிரீ ஷாப் எனப்படும் வரி இல்லாத விற்பனையகங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இதுவரை நிலவி வந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் செயல்படும் டூட்டி ஃபிரீ விற்பனையகங்களில் விற்கப்படும் சென்ட் உள்ளிட்ட வாசனை திரவியங்கள், சாக்லெட்டுகளுக்கு வரி கிடையாது. தங்களது சொந்த உபயோகத்துக்காக பயணிகள் வாங்கும் இந்தப் பொருட்கள் சுங்க எல்லையை தாண்டாத வரை அவற்றுக்கு வரி விதிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதேபோன்ற தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் பிளமிங்கோ டூட்டி ஃபிரீ விற்பனையகம் தொடுத்த வழக்கிலும் பிறப்பித்துள்ளது.

ஆனாலும் இந்த விவகாரத்தில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது. அதாவது வாசு குளோத்திங் நிறுவன வழக்கில், டூட்டி ஃபிரீ ஷாப்புக்கு சப்ளை செய்த பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குட்பட்டது என்றும், அந்த விற்பனையகம் இந்தியாவுக்கு வெளியில் இல்லை என்பதால் அவ்விதம் சப்ளை செய்த பொருட்களை ஏற்றுமதியாகக் கருத முடியாது என்று குறிப்பிட்டது பிரச்சினையை சிக்கலாக்கியது.

அதேசமயம் வரி விதிப்பு தொடர்பான ஆணையம், வெளிநாடு செல்லும் பயணிகள் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பொருட்களை வாங்கினாலும் அவை வரி விதிப்புக்குட்பட்டவை என குறிப்பிட்டது. ஆனாலும் இத்தகைய டூட்டி ஃபிரீ ஷாப்களில் அதிகம் வாங்கப்படுபவை மதுபானங்கள். இவை ஜிஎஸ்டி வரம்பில் வராதவையாகும்.

வரியற்ற விற்பனையகங்களில் ஜிஎஸ்டி உண்டா இல்லையா என்பது மிகுந்த சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. முந்தைய வாட் விதிப்பின்போதும் இதே நிலைதான் நீடித்தது. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகும் இதில் பெருமளவு மாற்றம் ஏதும் வரவில்லை. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த வெவ்வேறு வகையான தீர்ப்புகள் பிரச்சினையை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கின. ஆனால் தற்போது அகமதாபாத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதில் தெளிவான முடிவை எடுக்க வழியேற்படுத்தியுள்ளது.

அதின் கிருஷ்ணா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், டூட்டி ஃபிரீ ஷாப்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் இந்த விற்பனையகங்கள் மாநில மற்றும் மத்திய ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஏனெனில் இவை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும்பட்சத்தில் இன்புட் டாக்ஸ் கிரெடிட் எடுக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சுங்க எல்லையைக் கடந்து சென்றால் அவை ஐஜிஎஸ்டி வரி விதிப்புக்கு உட்படுவதாக விற்பனையகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close