[X] Close

மத்தியில் நிலையான அரசு அமைவதால் சென்செக்ஸ் 623 புள்ளிகள் உயர்வு: வங்கிப் பங்குகள் 5% அதிகரிப்பு


623-5

  • kamadenu
  • Posted: 25 May, 2019 08:28 am
  • அ+ அ-

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவது உறுதியானதால் வாரக் கடைசி நாளான நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 623 புள்ளிகள் உயர்ந்தது. இதன் மூலம் புள்ளிகள் 39,434 புள்ளிகளைத் தொட்டது.

தேசிய பங்குச் சந்தையில் 187 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 11,844 புள்ளிகளானது. அனைத்து பங்குகளும் குறிப்பாக ஆட்டோமொபைல், வங்கித்துறை, நிதிச் சேவைத்துறை, எப்எம்சிஜி, உலோகம், மருந்து உற்பத்தி என அனைத்து துறைகளின் பங்குகளும் 1.5% முதல் 5% வரை உயர்ந்தன.

நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வெளியானபோது குறியீட்டெண் 40 ஆயிரம் புள்ளிகள் வரையும், தேசிய பங்குச் சந்தை 12 ஆயிரம் புள்ளிகள் வரையும் தொட்டது குறிப்பிடத்தக்கது. வங்கித் துறையில் பாங்க் ஆஃப் இந்தியா (8.91), யூனியன் வங்கி (8.24%), பாங்க் ஆஃப் பரோடா (7.80%), கனரா வங்கி (6.91%), ஓரியண்ட் வங்கி (6.09%), பிஎன்பி (5.73%) உயர்ந்தன. ஐசிஐசிஐ அதிகபட்சமாக 5.24% வரை உயர்ந்தது.

ஓஎன்ஜிசி மற்றும் என்டிபிசி ஆகிய இரண்டு நிறுவன பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன.

``இந்தத் தேர்தல் முடிவுகள் இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்தி விட்டது. மத்தியில் ஆட்சியின் மீதான நிலைத்தன்மை குறித்த சந்தேகம் போய்விட்டது. நிதி சார்ந்த சீர்திருத்தங்கள் தொடரும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. இவைதான் பங்குச் சந்தையின் எழுச்சிக்கு முக்கியக் காரணம்,’’ என்று நொமுரா நிறுவனத்தின் தலைவர் பிரபாத் அவஸ்தி சுட்டிக் காட்டியுள்ளார்.

புதிய அரசு மேலும் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்து பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை பங்குச் சந்தை வட்டாரத்தில் உருவாகியுள்ளதையே இது காட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

என்டிஏ-வின் மாபெரும் வெற்றியை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பெருமளவில் வரவேற்றுள்ளன. இந்த வெற்றியின் மூலம் மேலும் பல பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன. தேர்தல் முடிவுகள் எப்படியிருக்குமோ என்ற சந்தேகத்தில் முதலீடுகளை நிறுத்தி வைத்திருந்த அன்னிய முதலீட்டு நிறுவனங்களை மீண்டும் முதலீடு செய்ய வழிவகுத்துள்ளதாக நியூ ஜெர்ஸியில் உள்ள குளோவிஸ்டா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி தர்ஷன் பட் தனது இ-மெயிலில் தெரிவித்துள்ளார்.

மற்ற வளரும் நாடுகளின் பங்குச் சந்தையை விட இந்திய பங்குச் சந்தைகள் மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக நோர்டியா எனும் முதலீட்டு அமைப்பின் உத்திசார் ஆய்வாளர் ஹெர்டா அலாவா தெரிவித்துள்ளார். சீனா, அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போரால் இந்தியா பாதிக்கப்படவில்லை. அதேசமயம் தேர்தல் குறித்து எழுந்த நிலையற்ற சூழலும் தற்போது விலகிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் எஃப்ஐஐ முதலீடு ரூ. 2,026 கோடியாகும். இருப்பினும் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் காரணமாக அன்னிய செலாவணி சந்தை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

ரூபாய் மதிப்பு உயர்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 49 காசுகள் உயர்ந்து 69.53 என்ற அளவில் வர்த்தகமானது. வாராந்திர நிலவரப்படி கடந்த வாரம் 70 காசுகள் வரை ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை வர்த்தகம் முடிவில் ரூ. 70.02 என்ற அளவில் முடிந்திருந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஏற்ற, இறக்கங்கள் நிலவியபோதிலும் இறுதியில் மதிப்பு நிலைத்தன்மை அடைந்தது.

மத்தியில் நிலையான ஆட்சி அமைந்தது, இதனால் அன்னிய முதலீட்டு நிறுவன முதலீடுகள் அதிகரித்தது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது ஆகியன ரூபாய் மதிப்பு உயர்ந்ததற்கான காரணங்களாக கூறப்பட்டன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close