[X] Close

ரூ. 656 கோடி அரசு முதலீட்டுக்கு பங்குகள்: ஏஏஐ-யிடம் நிதி அமைச்சகம் கோரிக்கை


656

  • kamadenu
  • Posted: 22 May, 2019 08:25 am
  • அ+ அ-

இந்திய விமான ஆணையத்தில் (ஏஏஐ) மத்திய அரசு முதலீடு செய்த ரூ. 656 கோடி தொகைக்கு பங்குகளை வழங்குமாறு நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தனி அமைப்பாக செயல்பட 1995-ம் ஆண்டு இந்திய விமான ஆணையகம் உருவாக்கப்பட்டது. அத்துடன் தேசிய விமானநிலைய ஆணையம் மற்றும் சர்வதேச இந்திய விமான ஆணையங்களும் இதனுடன் இணைக்கப்பட்டன.

ஆனால் ஏஏஐ-யில் அரசு முதலீடு செய்த ரூ. 656.56 கோடிக்கு இணையான மதிப்பிலான பங்குகள் இதுவரை அரசுக்கு வழங்கப்படவில்லை. இதனிடையே நிதி அமைச்சக அதிகாரிகள், நிறுவன விவகார அமைச்சக அதிகாரிகள், சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதோடு பங்குகளை வழங்குவது தொடர்பாக சட்ட ரீதியிலான ஆலோசனைகளையும் பெற்றுள்ளனர்.

ஆனாலும் இதுவரை பங்குகள் வழங்கப்படாத நிலையில் நிதி அமைச்சகம் இது தொடர்பாக இந்திய விமான ஆணையத்துக்கு (ஏஏஐ) விவரமான கடிதத்தை எழுதியுள்ளது. அதில் முதலீடு செய்யப்பட்ட ரூ. 656.56 கோடிக்கு பங்குகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பங்குகளை வழங்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டால் ஏஏஐ நிறுவனம் தனி நிறுவனமாக கருதப்பட்டு நிறுவன சட்டத்தின்கீழ் வரும். பங்குகளைப் பெற்ற பிறகு அவற்றை விலக்கல் செய்வது, பங்குச் சந்தையில் பட்டியலிடுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

கடந்த நிதி ஆண்டில் (2017-18) ஏஏஐ ஈட்டிய மொத்த லாபமான ரூ. 2,800 கோடியை டிவிடெண்டாக அரசுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு வரை லாபத்தில் 30 சதவீதத்தை மட்டுமே அரசுக்கு டிவிடெண்டாக ஏஏஐ வழங்கி வந்தது.

முதலீடு சீரமைப்பு திட்டத்தின்கீழ் பொதுத்துறை நிறுவனங்கள் அதிகபட்ச டிவிடெண்டை அரசுக்கு வழங்க வேண்டும் என முதலீட்டு கொள்கை வலியுறுத்துகிறது.

ஏஏஐ வசம் 125 விமான நிலையங்கள் உள்ளன. இவற்றில் 18 சர்வதேச விமான நிலையங்கள், 7 சுங்க விமான நிலையங்கள், 78 உள்நாட்டு விமான நிலையங்கள், 26 சிவில் என்கிளேவ் (விமானப் படைக்கான தளங்கள்) ஆகியன இதில் அடங்கும்.-பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close