[X] Close

அமேசான் மீது வழக்கு பதிவு


  • kamadenu
  • Posted: 19 May, 2019 08:51 am
  • அ+ அ-

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நொய்டா, செக்டார் 58-ல் அமைந்துள்ள காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தரை விரிப்புகள் மற்றும் கழிப்பறை மேல் உறை உள்ளிட்டவற்றில் இந்து கடவுளின் படத்துடன் வெளியிட்டுள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தரை விரிப்புகள் மற்றும் கழிப்பறை உறைகள் இத்தகைய படத்துடன் தங்களது ஆன்லைன் தளத்தில் கிடைப்பதாக நிறுவனத்தின் இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இந்த விஷயம் வெளியான உடனேயே சமூக வலைதளத்தில் அமேசானை புறக்கணிப்போம் என்ற வாசகங்களுடன் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்திகளைப் பதிவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அமேசான் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிறுவனத்தில் பதிவு பெற்றுள்ள அனைத்து விற்பனை நிறுவனங்களும் விற்பனைக்கான வழிகாட்டு நெறிகளை கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். விதிகளை மீறும் நிறுவனங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

குறிப்பிட்ட தரை விரிப்புகள் மற்றும் கழிப்பறை உறைகள் ஆகியன தங்கள் விற்பனைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close