[X] Close

நேர்மை இல்லையெனில் பேச்சுவார்த்தையால் பயனில்லை: அமெரிக்காவிடம் சீனா கண்டிப்பு


  • kamadenu
  • Posted: 19 May, 2019 08:50 am
  • அ+ அ-

அமெரிக்கா தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிடில் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை என்று சீனா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் வலுவடைந்து வரும் நிலையில், இதைத் தவிர்க்க பேச்சுவார்த்தை சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா விதித்த வரி விதிப்புக்கு பதிலடி தரும் விதமாக சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதித்தது. இதனிடையே சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை தனது கருப்புப் பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. ஹூவாய் நிறுவனமானது தொலைத் தொடர்பு தொழில்நுட்ப கருவிகளைத் தயாரிக்கிறது. இந்நிறுவன தயாரிப்புகள் பெருமளவு அமெரிக்க நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்தது சீனாவின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே அடுத்தகட்ட பேச்சு நடைபெறுவதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை என்றே தோன்றுவதாக சிஎன்பிசி செய்தி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூவாய் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்திருந்தாலும், அமெரிக்க வர்த்தகத் துறை விரைவிலேயே இந்த தடையை சிறிது காலம் விலக்கிக் கொள்ளும். அந்த சமயத்தில் ஹூவாய் நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்தும் நிறுவனங்கள் அவற்றை வாங்கிக்கொள்ள முடியும் என்று வர்த்தகத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் பொருட்களை சப்ளை செய்ய முடியாது என்றே தோன்றுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லியு காங், இப்போதைக்கு வர்த்தகப் பேச்சு இல்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் சீனா எப்போதுமே பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளது. ஆனால் முந்தைய பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட சில விஷயங்களை, நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும். அதை நிறைவேற்றாத நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க நடவடிக்கைகளுக்கு சீனா எந்த வகையில் பதிலடி தரும் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து சீன ஊடகங்கள், இந்த வர்த்தக போர் மூலம் சீனாவை பின்னுக்குத் தள்ள முடியாது. இத்தகைய முயற்சிகள் அனைத்தும் இன்னும் வலுவாக வளர்ச்சி பெறவே வழிவகுக்கும் என்று செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா- சீனா இடையே அடுத்தகட்ட பேச்சு நடைபெறும் என்ற நம்பிக்கையில் பங்குச் சந்தைகளில் சற்று ஏற்றம் காணப்பட்டது. இருப்பினும் டாலருக்கு நிகரான சீன கரன்சியான யுவான் மதிப்பு கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது. அதேசமயம் அமெரிக்க கடன் பத்திரங்களின் மதிப்பு அதிகரித்தது.

இரு நாடுகளிடையே அதிகரித்து வரும் இந்த வர்த்தகப் போர் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close