[X] Close

கருப்புப் பணம் குறித்த விவரங்கள் அரசிடம் இல்லை: நிதி அமைச்சகம் திட்டவட்டமான பதில்


  • kamadenu
  • Posted: 18 May, 2019 08:19 am
  • அ+ அ-

கருப்புப் பணம் எவ்வளவு புழக்கத்தில் உள்ளது என்ற விவரம் அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நிதி அமைச்சகத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்தபதில் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஸ்விட்சர்லாந்தில் எவ்வளவு கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கியுள்ளனர் என்ற விவரத்தை வெளியிட முடியாது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரகசியம் கருதி இந்த தகவல்களை வெளியிட முடியாது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருப்புப் பணம் பதுக்கப்பட்ட விவரம் தொடர்பாக ஒவ்வொரு வழக்குக்கும் தேவையான தகவல்களை இந்தியாவும், ஸ்விட்சர்லாந்து அரசுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்கின்றன. இது தொடர்பாக விசாரணையும் நடைபெறுகிறது. இந்த நடவடிக்கையானது தொடர் நடவடிக்கை என்றும்நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் எவ்வளவு கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது மற்றும்வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு என்பன போன்ற விவரங்கள் நிதி அமைச்சகத்திடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

பிடிஐ பத்திரிகையாளர்கள் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ)கீழ் அளிக்கப்பட்ட பதிலில் இந்த விவரங்களை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்திலிருந்து எத்தனை கருப்புப் பண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்து இந்திய அரசுக்கு வந்தவிவரங்கள் என்ன, இதில் இடம்பெற்றுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை விரிவாக அளிக்கும்படி கோரப்பட்டது. இந்தியா, ஸ்விட்சர்லாந்து இடையே வரி சார்ந்த விவரங்களை பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் 2016-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி போடப்பட்டது.

இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஸ்விட்சர்லாந்தில் பணம் போட்டுள்ள இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் விவரங்களை ஸ்விட்சர்லாந்து அளிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது. ஆனாலும் 2018-ம் ஆண்டுக்குப் பிறகான விவரங்களை மட்டுமே அளிக்க முடியும் என்றும் முந்தைய ஆண்டுகளில் போடப்பட்ட வங்கிக் கணக்கு சார்ந்த விவரங்களை தருவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று ஸ்விட்சர்லாந்து கூறிவிட்டது.

ஹெச்எஸ்பிசி வங்கி விவகாரம்

பிற வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணம் குறித்த விவரமும் நிதி அமைச்சகத்திடம் கேட்கப்பட்டது. இதன்படி ஹெச்எஸ்பிசி வங்கியில் போடப்பட்ட கருப்புப் பணம் குறித்த தகவல் வெளியானது. பிரான்சுடனான இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தத்தின்படி 427 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட கணக்கில் காட்டப்படாமல் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட ரூ.8,465 கோடி இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 427 வழக்குகளில் இதுவரை முடிந்த வழக்குகளில் அபராத தொகை ரூ. 1,291 கோடி வசூலிக்கப்பட்டது. இதன்படி மொத்தம் 162 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்தது.

கருப்புப் பணம் தொடர்பாக மூன்று குழுக்கள் தகவலை பதிவு செய்துள்ளன. இந்தக் குழுக்களை நாடாளுமன்ற குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்ற குழுவின் அறிக்கையை வெளியிடுவது நாடாளுமன்ற உரிமையை மீறும் செயல் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைகள் அனைத்துமே 4 ஆண்டுகளுக்குமுன்பு தாக்கல் செய்யப்பட்டவையாகும். டெல்லியைச் சேர்ந்த தேசிய பொது நிதி மற்றும் கொள்கை வகுக்கும் மையம் (என்ஐபிஎஃப்பி), தேசிய கவுன்சில் ஃபார் அப்ளைடு எகனாமிக்ஸ் மற்றும் ஆராய்ச்சி, பரீதாபாதைச் சேர்ந்த நிதி நிர்வாகத்துக்கான தேசிய மையம் (என்ஐஎஃப்எம்) ஆகியவை கருப்புப் பணம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close