[X] Close

சீனா அமெரிக்கா வர்த்தக போர்!- ஜவுளி சந்தையை கைப்பற்றுமா இந்தியா?


  • kamadenu
  • Posted: 16 May, 2019 09:09 am
  • அ+ அ-

உலக வல்லரசான அமெரிக்கா, வல்லரசாக முயற்சித்து வரும் சீனா மீது தொடுத்துள்ள வர்த்தகப் போர், உலகப் பொருளாதாரத்தின் திசையையே மாற்றி வருகிறது. சீனாவின் ஜவுளி உள்ளிட்ட உற்பத்தித் துறைகளைக் குறிவைத்து அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள், சீனாவின் சந்தையைப் பாதிக்கும். இந்த சூழலைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் ஜவுளி சந்தையை இந்திய ஜவுளித் துறையினர் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். அது பல்லாயிரம் கோடி வர்த்தகத்தை இந்தியாவுக்கு கிடைக்கச் செய்யும். அதன் மூலம் இந்திய ஜவுளித் துறையின் வளர்ச்சி வேகமாய் இருக்கும் என்கிறது இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு.

கடந்த 25 ஆண்டுகளில் சீனாவின் அதிரடியான நடவடிக்கைகள், அபார வளர்ச்சி, பல்வேறு துறைகள் மற்றும் நாடுகளின் மீது செலுத்தும் வர்த்தக ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். பல்வேறு நாடுகளிலும் சீனப் பொருட்களின் ஆதிக்கம் மேலோங்கிவிட்டது. குறிப்பாக, அமெரிக்காவிலேயே சீனப் பொருட்களின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் அபரிமித வருவாய், சீனாவை பலம் பொருந்திய நாடாக மாற்றியுள்ளது. இதனாலேயே, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது சீனா. எப்போதுமே உலகின் பெரிய அண்ணனாகப் பாவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது பெரும் உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

‘சீனாவின் வர்த்தகம்தானே, அந்த நாட்டை வல்லரசாக்குகிறது, இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்’ என கருதத் தொடங்கியிருக்கும் ட்ரம்ப், கொள்கை முடிவெடுத்து, சீனாவுடனான அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருகிறார். இதுவரை உலக வர்த்தக நிறுவனம் (டபிள்யு.டி.ஓ.) என்ற கட்டிடத்துக்குள்ளும், அதன் வரையரைக்குள்ளும் இருந்த வர்த்தகக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, புதிதாக ஒரு திசையை நோக்கி வர்த்தக உலகை கொண்டுசெல்கிறார்.

500 பில்லியன் டாலர்கள்...

ஆண்டுதோறும் 500 பில்லியன் டாலர் அளவுக்கு சீனாவிடமிருந்து பொருட்களை  வாங்குகின்றனர் அமெரிக்கர்கள். தற்போது 3 நிலைகளில் இறக்குமதி வரி விதிப்பை உயர்த்தி, சீனாவுக்கு ‘செக்’ வைக்கிறது அமெரிக்க அரசு. இரு தினங்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில், ஜவுளி மற்றும் ஆடை வகைகளுக்கான வரி உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களின் இறக்குமதிக்கு புதிதாக வரி விதிக்கப் பட்டுள்ளது. இந்த வர்த்தகப் போரால், மற்ற பல நாடுகளின் உற்பத்திதுறை வளர்ச்சியடையும் என்றுகணிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த ரக தொழில் நுட்பஉற்பத்தி ஐரோப்பிய நாடுகளுக்கும், சாதாரண பொருட் களின் உற்பத்தி ஆசியநாடுகளுக்கும் சைனாவிலிருந்து ஓரளவுக்கு இடம் பெயரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய உற்பத்தித் துறையின் பங்கு ஜிடிபி-ல் 17 சதவீதமாக உள்ளது. இதை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். அதன் மூலம் வேலைவாய்ப்பும் பெருகும்.

ரூ.50 ஆயிரம் கோடி வாய்ப்பு!

இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்  பிரபு தாமோதரன் கூறும்போது, “இந்திய ஜவுளி ஏற்றுமதி சுமார் 37 பில்லியன் டாலர்கள். அதேசமயம், சீனாவின் ஜவுளி ஏற்றுமதி 260 பில்லியன் டாலர்கள். அமெரிக்க ஜவுளி சந்தை மிகப் பெரியது. இந்த நிலையில், சீனா ஜவுளிக்கு அமெரிக்கா வரி விதிக்கும்போது, அந்நாட்டு வர்த்தகர்கள் கவனம் பிற நாடுகளின் பக்கம் திரும்பும். சீனாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 10 சதவீதம் குறைந்து, அதில் 25 சதவீதத்தை இந்தியா பெற்றாலே, ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதி வாய்ப்பு உருவாகும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஜவுளி ஏற்றுமதியில் பெரிய வளர்ச்சி யில்லை. எனவே, இந்த வாய்ப்பு ஏற்றுமதியை அதிகரிப்பதுடன், அதிக அளவி லான வேலை வாய்ப்பையும் உருவாக்கும். ரூ.500 கோடி மதிப்பில் கனரகத் தொழிற்சாலையை உருவாக்கினால் புதிதாக

1,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதேசமயம், ரூ.500 கோடியை ஜவுளி உற்பத்தித் துறையில் முதலீடு செய்தால், புதிதாக 40,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.

குறிப்பாக, பெண்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் 27 சதவீதம் பெண்களே வேலைக்குச் செல்லும் நிலையில், ஜவுளித் துறை வேலைவாய்ப்பு பெரிய மாறுதலை உண்டாக்கும். அதேசமயம், இந்திய ஜவுளித் துறையில் 40 சதவீதம் பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பெண்கள் விரும்பி வேலை செய்யும் துறையாக ஜவுளி உற்பத்தித் துறை உள்ளது குறிப்பிடத் தக்கது.

எனவே, ஏற்றுமதி வளர்ச்சிக்கு உதவும் வகையில், நன்கு பொருளாதாரம் தெரிந்த அமைச்சரை மத்திய அரசு,  நியமிக்க வேண்டும். ஏற்றுமதி வாய்ப்பும், வேலைவாய்ப்பும் மிக்க ஜவுளித் துறை உள்ளிட்ட துறைகளைத் தேர்ந்தெடுத்து, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கான ஏற்றுமதி இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

அமெரிக்க பொருட்களுக்கு நாம் அதிகமாக வரி விதிக்கிறோம் என அமெரிக்கா கருதுகிறது. சில விஷயங்களை விட்டுக்கொடுத்து, சில அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு வரி குறைப்பு செய்ய வேண்டும்.

இதில் இழப்பு ஏற்படின், அதை ஈடுகட்ட நிதியுதவி செய்தும், பிரதிபலனாக அமெரிக்க ஜவுளிச் சந்தையை கைப்பற்றும் வகையில், சில சலுகைகளை அமெரிக்காவிடம் கேட்டுப் பெறலாம்.

ஜிஎஸ்டி ரீஃபண்ட் வழங்குவதை துரிதப் படுத்த வேண்டும். 90 சதவீத ஏற்றுமதி மதிப்புக்கு, 3 நாட்களுக்குள் வழங்குவது நல்லது. அமெரிக்கா-சீனா வர்த்தகப்போரில் அதிகம் பயனடையப் போவது வியட்நாம் நாடு.  ஜவுளி ஏற்றுமதிக்கான மூலப் பொருட்களை சீனாவிலிருந்து அந்நாடு இறக்குமதி செய்கிறது. ஆசிய ஒப்பந்தம் மூலம் வரியின்றி இந்தப் பொருட்களை இந்தியா வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், நூற்பாலை மற்றும் துணி தயாரிப்புத் துறைகளில் ஏற்றுமதியை வளர்க்க முடியும்.

பசுமை ஆடைகள் தயாரிப்பு

அமெரிக்கர்கள் பசுமை ஆடைகளை விரும்பி வாங்குவதால், தமிழகம்  இத்தகு ஆடை தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தலாம். காற்றாலை மின்சாரம்மூலம் தொழிற்சாலையை இயக்குவது, இயற்கை சாயம், குறைந்த அளவு தண்ணீர் பயன்பாடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.

அதேபோல, இயற்கை பஞ்சும், செயற்கை பஞ்சும் கலந்த ஆடைகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

இதற்காக, நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் ஃபைபர் நேச்சுரல் பாலிசி மற்றும் அனைத்து மூலப் பொருட்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி என்ற கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

அரசு மட்டுமின்றி, தொழில் துறையினரும் முயற்சித்து, அமெரிக்க ஜவுளிச் சந்தையைக்கைப்பற்ற வேண்டும். ஆட்கள் பற்றாக்குறையைப் போக்கி, தொழிலாளர்களின் பணித் திறனைஅதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறு மற்றும்நடுத்தர ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் இணைந்து, சந்தைக் கூட்டமைப்பு (மார்க்கெட்டிங் அலையன்ஸ்) அமைப்பின்

மூலம், பெரிய ஆர்டர்களைப் பெற முடியும்.

அமெரிக்க-சீன வர்த்தகப் போர்ஏற்படுத்தியுள்ள வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், ஏற்றுமதியை அதிகரிப்பதோடு, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கலாம். சீனா ஏற்றுமதிசெய்யும் எந்தெந்த ஜவுளிப்பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதிவிதித்துள்ளது, அந்தப் பொருட்களுக்கானஇந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில்அதுகுறித்த தகவல்களை வெளியிடுவோம் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close