[X] Close

ஒய்.சி. தேவேஷ்வர் மறைவு


  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:43 am
  • அ+ அ-

‘ஒய்சிடி’ என்று தொழில்துறை வட்டாரங்களில் பெரிதும் அறியப்பட்ட ஒய்.சி. தேவேஷ்வர் (72) நேற்று காலமானார். இவர் ஐடிசி நிறுவனத்தில் 23 ஆண்டுகள் தலைவராகப் பணியாற்றியவர்.

வெறுமனே சிகரெட் தயாரிப்பு நிறுவனமாக இருந்த ஐடிசி-யை பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தி மிகப்பெரும் வெற்றியை ஈட்ட காரணமாக இருந்தவர். இவரது தலைமையில் நிறுவனம் 50 மடங்கு வளர்ச்சியை எட்டியது. நிறுவன மதிப்பு தற்போது ரூ. 3.5 லட்சம் கோடியாகும். ஐடிசி ஹோட்டல்கள் இவர் பொறுப்பேற்ற போது 12 ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. ஐடிசி, வெல்கம், பார்ச்சூன் மற்றும் வெல்கம் ஹெரிடேஜ் என்ற பெயரில் இவை செயல்படுகின்றன.

1947-ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் பிறந்த இவர், டெல்லி ஐஐடி-யில் பட்டம் பெற்றவர். நிர்வாகவியல் படிப்பை ஹார்வர்டு பல்கலையில் மேற்கொண்டார். 1968-ம் ஆண்டு ஐடிசி-யில் இணைந்தார். 1996-ம் ஆண்டு இயக்குநர் குழுவில் இணைந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஐடிசி நிறுவனத்தில் சேர்ந்த தேவேஷ்வர், நிறுவனத்தின் தலைவர் பதவியில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர்.

தொழில்துறையில் இவரது சிறப்பான செயல்பாடுகளைக் கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு 2011-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. இவர் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பேற்ற போது நிறுவனம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தது. இதன் பங்குதாரராக இருந்த பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாகோ பிஎல்சி நிறுவனம் ஐடிசி மீது தொடுத்த வழக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது. அத்துடன் நிறுவனம் தொடர்ந்து நடக்குமா என்ற அச்சமும் நிலவியது. ஆனால் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளிலேயே நிறுவனத்தை சீரமைத்தார். வெறும் சிகரெட் தயாரிப்பில் மட்டுமே நீடிக்க முடியாது என்ற தொலை நோக்கு பார்வையோடு வேறு பல தொழில்களிலும் இறங்கினார். இதனால் இந்நிறுவனம் பன்முக தொழில் நிறுவனமாக வளர்ச்சிஅடைந்தது. ஆசீர்வாத், பிங்கோ, கிளாஸ்மேட் ஆகியன இவரது முயற்சியால் உருவான தயாரிப்புகளாகும். 2017-ம் ஆண்டு தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். இயக்குநர் குழுவில் மட்டும் தொடர ஒப்புக் கொண்டார். இவருக்குப் பதிலாக சஞ்ஜீவ் பூரி நிறுவன தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தேவேஷ்வர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close