[X] Close

தொழில்துறையில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பது அவசியம்: அசோசேம் தலைவர் பி.கே.கோயங்கா வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:41 am
  • அ+ அ-

தொழில்துறையில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என்று தொழில் கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு நிறுவனத்தின் தலைவர் பி.கே. கோயங்கா வெளியிட்ட அறிக்கையில் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

தொழில்துறையில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுவதன் மூலம் சூழலே மாறிப் போகும். அதற்கேற்ற வகையில் தொழில்துறையினர் பெண்களுக்கான வசதிகளை உருவாக்கித் தர வேண்டும். குறிப்பாக குழந்தைகள் காப்பகம், பணி நேரம், பணி புரியும் இடம் உள்ளிட்டவற்றை ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சில நிறுவனங்கள் ஏற்கெனவே இதுபோன்று வசதிகள் மற்றும் நிறுவன வடிவமைப்புகளில் மாற்றங்கள் செய்து, பெண் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளன என்று குறிப்பிட்ட அவர், இன்றைய சூழலில் அதிகரித்து வரும் போக்குவரத்து வசதி மற்றும் குடும்பங்கள் சுருங்கி வரும் சூழலுக்கு ஏற்ப பணியிடங்கள் பெண்களுக்கு ஏற்றதாக மாற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பெண் தொழில் முனைவோர்கள் அதிகம் உருவாக வேண்டும் என்றும் அதுதான் அசோசேம் அமைப்பின் இலக்கு என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பெண்கள் தங்கள் பணியிடங்களில் மிகச் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். அவ்விதம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.

பாலின பேதம், பெண்கள் புறக்கணிப்பு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்காதது ஆகிய காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு 25 சதவீதம் என்ற அளவில் நிலையாக உள்ளது. இதில் வளர்ச்சியேற்படாதது துரதிருஷ்டமானது என்றார்.

பணியிடங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கேற்ற சூழலை உருவாக்க வேண்டும். அலுவலகம், வீடு ஆகிய இரண்டையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவர்களுக்குள்ளது. அதற்கேற்ப அவர்களது பணி புரியும் நேரம் வகுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கு பொருளாதார ரீதியாக சுதந்திரம் கிடைப்பதற்கேற்ற சூழலை உருவாக்க அசோசேம் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் காரணமாகவே மனித வள குறியீட்டில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்டார்ட் அப் தொடங்குவதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் அசோசேமின் பங்களிப்பு கணிசமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், இதற்காக பெண்களின் திறனை மேம்படுத்த பயிற்சி, பணி பயிற்சி உள்ளிட்டவற்றையும் அளிப்பதாகக் குறிப்பிட்டார். அதேசமயம் பெண்கள் உருவாக்கும் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் அசோசேம் உருவாக்கித் தருகிறது என்று சுட்டிக்காட்டினார்.

பெண்கள் தொழில்துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கில் பெண்களால், பெண்களுக்கென நடத்தப்படும் தொழில்நிறுவனங்களை கவுரவிக்கிறது. இதுதவிர, அனைத்து மகளிர் தொழில்துறை என்ற இலக்கை நிர்ணயித்து அதற்கான நடவடிக்கைகளை அசோசேம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பெண் தொழில் முனைவோர் உருவாக்கத்தால் பொருளாதார சுதந்திரம் கிடைக்கும், இதனால் குடும்பம் முன்னேறுவதோடு சமூகமே மேம்பாடு அடையும் என்று கோயங்கா குறிப்பிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close